கோவை மாவட்டத்தில் நாளை முதல் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் 9 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக்
கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று இரவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு வர்த்தக சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோவை மாவட்டத்துக்குக் கூடுதலாகத் திங்கள்கிழமை முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள பால், மருந்தகங்கள், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
கோவை மாநகராட்சியில் கிராஸ்கட் ரோடு, 100 அடிரோடு, காந்திபுரம் 5,6,7-வது வீதிகள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை,
ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும். மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. சில்லறை விற்பனைக்கு அனுமதியில்லை. 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இவற்றைக் கண்காணிக்க வேண்டும்.
மேலும், தமிழக, கேரள மாநில எல்லைகள் அனைத்தும் சோதனை சாவடி அமைத்துக் கண்காணிக்கப்படுகிறது. அந்த வழியாக வரும் வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் கட்டாயமாக 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்று அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட சான்று இல்லாவிட்டால், சோதனை சாவடிகளில் 'ரேண்டம் ஆர்டிபிசிஆர்' பரிசோதனை மேற்கொள்ளப்
படும். சான்று உள்ளவர்கள் மட்டுமே கோவை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.