கோவை:
வங்கி ஊழியர்கள், அதிகாரிகளின்ஊதியம், ஓய்வூதியம் தொடர்பாக ஜூலை மாத புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள குறைகளை களைந்திட வேண்டுமென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழு தலைவர் பி.ஆர்.நடராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, பி.ஆர்.நடராஜன் எழுதியுள்ள கடிதம்:
வங்கித் துறையின் 11ஆவது இருதரப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவங்கி நிர்வாகங்களை பிரதிநிதிப்படுத்தும் இந்திய வங்கிகள் சங்கத்திற்கும் சில தொழிற்சங்கங்களுக்கும் இடையில் 22 ஜூலை 2020 அன்றுஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப் பட்டுள்ளது என்று அறிகிறேன். இந்த ஒப்பந்தம் பெரும்பாலான வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இல்லை என்ற காரணத்தினால் இந்தியவங்கி ஊழியர் சம்மேளனம் கையெழுத்திடவில்லை என்றும் அறிகிறேன். அவற்றில் சில முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் பொருட்டு தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
சிறப்புப் படியின் இணைப்பு
கடந்த 10ஆவது இருதரப்பு ஒப்பந்தத்தில் அடிப்படை ஊதியத்தில் 2 சதவீதம் மட்டும் உயர்வு கொடுக்கப்பட்டு மீதமுள்ள பகுதியை சிறப்புப் படி (Special Allowance) என்ற ஒன்று உருவாக்கப்பட்டு அதனுடன் சேர்க்கப்பட்டது. இந்த சிறப்பு படிக்கு அகவிலைப் படி மட்டும் கொடுக்கப்பட்டு அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படாததால் ஓய்வுக்கால பலன்களுக்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலை உள்ளது. இதனால் இந்தக் காலகட்டத்தில் பணி ஓய்வுபெற்ற ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஓய்வுக்காலபலன்களில் கணிசமான இழப்புஏற் பட்டது. சிறப்புப் படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படாததால் ஏற்பட்டதீவிர பாதிப்பை உணர்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் தற்போதைய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைகளின் போது இதனைசரி செய்யும் வகையில் விவாதித்தன. குறைந்தபட்சம் சிறப்புப் படியின் ஒரு பகுதியையாவது அடிப்படை ஊதியத்து டன் இணைத்து ஊழியர்களின் ஓய்வுக்க்காலப் பயன்களின் பாதிப்பை குறைக்க இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புக் கொண்டது.ஆனால் 2020ஜூலை 22 ல் கையெழுத்தான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏதோ சம்பந்தமில்லாத சில காரணங்களைக் கூறி பணியாளர்களுக்கான இந்த இழப்பை சரிசெய்யஇந்திய வங்கிகள் சங்கம் மறுத்துவிட்டது. இந்திய வங்கிகள் சங்கத்தின் இத்தகைய போக்கு மிகவும் தவறானது மட்டுமல்லாமல் எந்த விதத்திலும் உதவாததுஎன்பதை தாங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்
அடிப்படைச் சம்பளத்தில் உயர்வு
மீண்டும் இந்த 11ஆவது இருதரப்பு ஒப்பந்தத்திலும் இந்திய வங்கிகள் சங்கம்சென்ற முறை போலவே,அநியாயமாக முரண்பட்ட நிலையை உருவாக்கும் வகையில் 2.5 சதவீதத்திற்கு மேல் அடிப்படை ஊதியத்தில்உயர்வு வழங்கப்படாது என்று முடிவெடுத்தது. அதன் காரணமாக, வரக்கூடிய காலகட்டத்தில் ஓய்வு பெற இருக்கும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் மற்றும் அதிகாரிகளின் ஓய்வுக்கால பலன்களும் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
வாரம் ஐந்து நாட்கள் வேலை
ரிசர்வ் வங்கி, பங்கு வர்த்தகம்,மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் போன்றவை வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்குகின்றன என்பதை தாங்கள் அறிவீர்கள். வங்கி ஊழியர் கள் மற்றும் அதிகாரிகள் இந்தப் பேரிடர் காலத்திலும் தங்கள் கடமைகளை மிகுந்த பொறுப்புணர்வுடனும், அர்ப்பணிப்புடனும் செய்து கோடிக்கணக்கான மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். வாரம் ஐந்து நாட்கள் வேலை என்பது வங்கியாளர்களின் பணி-வாழ்க்கை சமநிலையை பாதுகாப்பதற்கும், அதன்மூலம் அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் உதவும். இந்திய வங்கிகள் சங்கம், கடந்த இரு தரப்பு ஒப்பந்தத்தின் இறுதியில் அடுத்த ஊதிய ஒப்பந்தத்தில் வாரம் ஐந்து நாட்கள் வேலை என்பதுநிறைவேற்றப்படும் என்றும், அதன்முதல் கட்டமாக அப்போது மாதத்தின்2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்திருந்தது. ஆனால் இந்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இந்திய வங்கிகள் சங்கம்இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை
செயல்திறனுடன் இணைக்கப் பட்ட ஊக்கத்தொகை
வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் விருப்பத்திற்கு விரோதமாக செயல்திறனுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Performance Linked Incentive) என்ற புதிய திட்டம்இந்திய வங்கிகள் சங்கத்தால் இந்த ஒப்பந்தத்தில் திணிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த ஊக்கத்தொகையை சம அளவில் பெற முடியாது என்பதே உண்மை. இது ஊழியர்களின் மத்தியில் பிரிவினையை உருவாக்கி அதன்மூலம் இந்திய வங்கிகள் சங்கத்தின் எதிர்பார்ப்பிற்கு மாறாக அவர்களின் உற்பத்தித் திறனை பாதிக்கும். இந்த ஊக்கத்தொகைக்காக ஆகும் கூடுதல்செலவினை ஏற்கனவே இந்தியவங்கிகள் சங்கமும், தொழிற்சங்கங் களும் ஏற்றுக் கொண்ட 15 சதவீத உயர்விற்குமேல் அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அளிப்பது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தேசிய ஓய்வூதியத் திட்டம்
இந்திய அரசின் கொள்கை முடிவின்படி “தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் நிர்வாகத்தின் பங்கு அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது”. இதுஓய்வூதியத்தில் ஒரு சாதகமான உயர்வை வழங்கும் என்ற எதிர்பார்ப்புள்ள போதிலும், இந்த பணம் நிலையற்றபங்கு பத்திரங்கள் மற்றும் பரஸ்பரநிதிகளில் முதலீடு செய்யப்படுவதால் பென்ஷன் தொகை உயரும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. இவ்வாறு உத்தரவாத மில்லாத திட்டத்தில் வங்கியின் நிதியை வீணாக்குவதற்கு பதிலாக வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்அனைத்து வங்கிப் பணியாளர்களை யும் கொண்டு வந்தால் வங்கியும், பணியாளர்களும் ஒருசேர பலன் அடைவார்கள். மேலும் இது ஊழியர்களின் மத்தியில் ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களின் உற்பத்தித் திறன் உயர்வதற்கு பெருமளவு உதவும்.
ஓய்வூதியத் திட்டத்தை மேம்படுத்துதல்
வங்கித்துறையில் 1993 ஆம் ஆண்டு ஒப்பந்தம் மூலம் கொண்டுவரப்பட்ட வங்கி ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையானதாக இருக்கும் என்று முடிவாகியது. அதன் பிறகு ஒவ்வோர் சம்பளகமிஷனுக்கு பிறகும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் தொகை அதற்கேற்றார்போல் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 1993 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1986 முதல் பின்தேதியிட்டு கொண்டுவரப்பட்ட வங்கி ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்இன்று வரை ஒரு முறை கூட மேம்படுத்தப்படவில்லை என்பதைக் கண்டு தாங்கள் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள். எனவே ஓய்வூதியத்தை தற்போதைய ஒப்பந்தத்திற்கு நிகராக மேம்படுத்தி வழங்க வங்கி ஓய்வூதிய நிதியத்தில் போதுமான நிதி உள்ள நிலையிலும் இந்திய வங்கிகள் சங்கம் இந்த கோரிக்கையை நியாயமற்ற வகையில் நிராகரித்துள்ளதாக அறிகிறேன். வங்கித்துறையின் வளர்ச்சிக்கு உழைத்த வங்கிஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நியாயமான இந்த கோரிக்கை நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான நிதியை கணக்கீட்டா ளர்கள் மூலம் வரையறை செய்ய தேவையான விவரங்களை பகிர்ந்து கொள்ளக்கூட மறுக்கும் இந்திய வங்கிகள் சங்கத்தின் செயல் முற்றிலும் ஏற்க முடியாத ஒன்றாகவே உள்ளது.
குடும்ப ஓய்வூதியம்
இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவர் 2020ஜூலை 22 அன்று ”ஊழியர்கடைசியாக பெற்ற ஊதியத்தில் 30சதவீதமாக எவ்வித உச்சவரம்புமின்றி குடும்ப ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்படும்” என்று சொல்லியிருப்பது வரவேற்கப்பட கூடியது.ஆனாலும் இந்த அறிவிப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. எனினும் இந்திய வங்கிகள்சங்கத்தின் இந்தப் பரிந்துரை உங்களால் சாதகமான முறையில் பரிசீலிக்கப்படும் என நம்புகிறேன்.வங்கிப் பணியிலுள்ள மற்றும்பணிஓய்வு பெற்றுள்ள லட்சக்கணக்கான ஊழியர்களும், அதிகாரிகளும்பயனுறும் வகையில் மேற்கூறிய அனைத்து நியாயமான கோரிக்கைகளும் உங்களால் சாதகமான முறையில் பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்படும் என்றும் அதன் மூலம் அவர்கள் நாட்டின் வளர்ச்சியில் கூடுதல் ஈடுபாடுடனும், திறனுடனும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்றும் நம்புகிறேன்.இதுதொடர்பான உங்களின் உடனடி தலையீடு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.