மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் முழு அளவிலான விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் நடூர் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து 4 வீடுகள் மேல் விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். துயர சம்பவத்திற்கு நீதி கேட்டு நாகை திருவள்ளுவன் உள்பட செயற்பாட்டாளர்களும் மற்றும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறை போராட்டக்காரர்களை கொடூரமாக தாக்கி கைது செய்துள்ளது. இச்சம்பவம் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தவார் சந்த் கெஹ்லாட்டிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் உடனடியாக எஸ்.சி ஆணையத்தின் சேர்மன் அவர்களை நடூர் கிராமத்தின் சம்பவத்தை ஆய்வு செய்ய அனுப்பிட வேண்டும். எஸ்.சி. ஆணையத்தின் தலைவரிடம் காவல்துறையின் கொடூரத்தையும் 17 தலித் மக்கள் இறந்தது குறித்தும் முழு அளவிலான விசாரணை செய்திட உத்தரவிட வேண்டும். வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டத்தின் படி தொடர்ச்சியாக நடத்த வேண்டிய கண்காணிப்பு குழு கூட்டத்தை நடத்திடுமாறு தமிழக முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்ள வேண்டும். வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டத்தின் படி மாவட்ட அளவில் தொடர்ச்சியாக கண்காணிப்பு குழு கூட்டத்தை நடத்திட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டத்தின் படி சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திடுவதை உறுதிப்படுத்த வேண்டும்.