tamilnadu

img

தலித் பெண்ணை காதலித்த இளைஞர் வெட்டிக்கொலை உயிருக்கு ஆபத்தான நிலையில் இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

மேட்டுப்பாளையம், ஜீன் 25- மேட்டுப்பாளையம் அருகே சாலையில் பேசிக்கொண்டிருந்த காதலர்களை அரிவாளால் வெட்டியதில் இளைஞர் பலியான நிலையில், படுகாயமடைந்த இளம்பெண் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ரங்கராயன் ஓடையை சேர்ந்த கருப்புசாமி என்பவரின் மகன் கனகராஜ் (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் தர்ஷினி பிரியா. இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இதில் தர்ஷினி பிரியா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், கனகராஜ் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது. இதனால் இருவரின் காதலுக்கு கனகராஜின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் காதலர்கள் இருவரும் செவ்வாயன்று மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை அருகே உள்ள வெள்ளிபாளையம் பகுதியில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, கனகராஜன் சகோதரர் வினோத் என்பவர் திடீரென அரிவாளுடன் வந்து இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் உடல் முழுவதும் வெட்டப்பட்ட கனகராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல், படுகாயமடைந்த தர்ஷினி பிரியா ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.