தில்லி
உலகில் ஜனவரி (2020) மாதம் கொரோனா தொற்று பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. தொடக்கத்தில் சீனாவில் ஆதிக்கம் செலுத்திய கொரோனா பிறகு ஐரோப்பா நாடான இத்தாலியில் காலடி வைத்தது. அதன்பின் அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி என பல நாடுகளில் பரவலான வேகத்தில் பரவியது. மார்ச் மாத இறுதியில் ஐரோப்பிய நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி அக்கண்டத்தை உருக்குலைத்தது. அமெரிக்க நாடும் கொரோனாவால் கடுமையாக பாதித்தது. இந்த காலகட்டத்தில் அமெரிக்கா கொரோனா மையமாக மாறியது. அங்கு தினசரி பாதிப்பு 30 ஆயிரத்துக்கு மேல் இருந்தது.
ஆசியா, தென் அமெரிக்கா போன்ற கண்டங்களிலும் கொரோனா பரவல் வேகம் அதிகமாக உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகள் விதித்தன. ஆனால் கொரோனா வைரஸ் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. போன போக்கில் வேகமாக பரவி கொண்டே இருந்தது. மே மாத இறுதி வரை உலகின் தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்குள் இருந்தது. பிரேசில். அமெரிக்கா, இந்தியா, பெரு, தென் ஆப்பிரிக்கா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் தினசரி பாதிப்பு ராக்கெட் வேகத்தில் எகிற ஜூலை மாத தொடக்கத்தில் புதிய உச்சமாக உலகின் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது.
இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 2.48 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதான் உலகின் அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு. இதில் அமெரிக்கா (73 ஆயிரம்), பிரேசில் (43 ஆயிரம்), இந்தியா (35 ஆயிரம்) ஆகிய நாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற நாடுகளில் தினசரி பாதிப்பு 7 ஆயிரத்துக்குள் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.