tamilnadu

img

50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூட யார் காரணம்?

திருப்பூர், ஏப். 7 –பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பின் தமிழ்நாட்டில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன, 5 லட்சம் பேர் வேலை இழந்தனர் என்று மாநில தொழில் துறை அமைச்சரே பகிரங்கமாக கூறினார். கம்யூனிஸ்ட்டுகள் வந்தால் தொழில் அழிந்துவிடும் எனச்சொல்லும் பாஜகவினர் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டதற்கு யார் காரணம் என்று சொல்லத் தயாரா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் கேள்வி எழுப்பினார்.சூலூர் ஒன்றியம் கோம்பைக்காடு லட்சுமி மண்டபத்தில் கொமதேக சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் பங்கேற்றுப் பேசியதாவது: வளர்ச்சி என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா தங்கள் சாதனைகளைச் சொல்ல முடியாத நிலையில் திசை திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ளது. கம்யூனிஸ்டுகள் வந்தால் தொழில் அழியும் என பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் பாரதிய ஜனதா மோடி ஆட்சியில்500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினாலும், ஜிஎஸ்டி வரிவிதிப்பினாலும் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. 5 லட்சம் பேர் வேலை இழந்தனர். சிறு, குறு தொழில்கள், வர்த்தகம், விவசாயம் என அடிப்படைதொழில்களை பாதிக்கச் செய்தது பாரதிய ஜனதா கட்சி.கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் என இந்த மண்டலத்தில் ஜவுளித் தொழில் கடுமையாக பாதிக்கப்படுவதற்கு மத்தியஅரசின் தொழில் கொள்கைதான் காரணம். எனவே மோடி ஆட்சியைத் தோற்கடிக்க வேண்டும். கோவை நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கே.தங்கவேல் கேட்டுக் கொண்டார்.


பொங்கலூர் நா.பழனிச்சாமி


திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி பேசுகையில், அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பிரச்சனை கடுமையாக உள்ளது. ஒவ்வொரு குடும்பமும் மாதம் பல ஆயிரம் ரூபாய் குடிநீருக்குச் செலவிடும் நிலை உள்ளது. ஆனால் அடிப்படைபிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தடுக்கின்றனர். அதேசமயம் ரூ.20 ஆயிரம் கோடிக்கு உள்ளாட்சி பணிகள் நடைபெற்றிருப்பதாக மாநில அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகிறார். எங்காவது உள்ளாட்சிகளில் வேலை நடந்ததைக் காண முடிகிறதா? மக்கள் மோடி மீதும், அதிமுக ஆட்சியாளர்கள் மீதும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். நாட்டைக் குட்டிச்சுவராக்கிய எடப்பாடி அரசுக்கு பாடம் கற்பிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். பாஜக, அதிமுகவை தோற்கடித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என்று கூறினார்.முன்னதாக இக்கூட்டத்தில், மதிமுக சூலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆனந்தகுமார், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் பி.எஸ்.ராமசாமி, காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி மற்றும் பாலு உள்ளிட்டோர் பேசினர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த பெருந்திரளானோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். நிறைவாக இளங்கோ நன்றி கூறினார்.