tamilnadu

img

ஆளும்கட்சி பக்கம் திரும்பாத வீடியோ கேமரா

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் எளிய முறையில் அந்த தேர்தல் பொதுக்கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் பேசும் அந்த பொதுக்கூட்டம் அப்போது துவங்கியிருக்கவில்லை. தேர்தல் அவசரம் என்கிற வில்லை ஒட்டிய அந்த ஜீப் மேடை அருகில் வந்து நின்றது. அதிலிருந்து வீடியோ கேமராவுடன் இறங்கியவர் சுற்றிச்சுற்றி மேடை, மைக், இருக்கைள் என ஒன்று விடாமல் பதிவு செய்தார். இந்நிலையில் ஜீப்பை ஒட்டி தார் கலந்த ஜல்லி ஏற்றிய ஒரு லாரி திடீரென வந்து நின்றது. சற்று தூரத்தில் சாலையை சுத்தம் செய்யும் பணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மேற்பார்வையில் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. தார் நாற்றமும், சாலை தூசும் திருவள்ளுவர் திடலை சூழ்ந்துகொண்டது. மற்றொரு பக்கம் நகரத்தின் முக்கிய சாலையான மார்க்கெட் சாலையை மறித்து மேடை அமைக்கும் பணி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மேற்பார்வையில் நடந்து கொண்டிருந்தது. நகரின் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இதுநாள் வரை மக்களை அவதிக்குள்ளாக்கிய நிலையில் குழிகளில் ஜல்லி கற்களை நிரப்பி சீரமைப்பு பணி அவசர அவசரமாகநடந்து கொண்டிருந்தது. இவை அனைத்தும் இன்று (ஞாயிறு) அதிமுக இணை அமைப்பாளரான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓட்டு கேட்டு வருவதற்கான முன் ஏற்பாடுகள் தான். இவற்றை தேர்தல் அவசர வாகனங்களிலிருந்து எந்த கேமாராவும் படம்பிடித்ததாக தெரியவில்லை. அதேநேரம், பாரபட்சமில்லா சமவாய்ப்புடன் கூடிய தேர்தல் நடப்பதாக தான் அனைவரும் நம்ப வேண்டும்!.