அதிகாலை நேரத்திலேயே, சாக்கடைப் பிரச்சனை விஸ்வ ரூபமெடுத்தது. பாத்ரூம், சமையலறை கழிவு நீர் வெளியேற மறுத்து விவகாரம் செய்தது. லட்சுமி வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தாள். தெருச்சாக்கடை தேங்கி கழிவு நீர் வீதியில் வழிந்து கொண்டிருந்தது. இருபக்க சாக்கடைகள் சேரும் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. ஆங்கில நாளிதழில் ஐக்கியமாகி சாய்வு நாற்காலியில் இருந்து கொண்டே உலகை அளந்து கொண்டிருந்த பெருமாளைப் பார்த்து, லட்சுமி எரிச்சலுற்றாள். “சாக்கடை அடச்சுக் கெடக்கு, போயி என்னான்னு பாருங்க” என லட்சுமி சொன்னதும் பெருமாள் சாய்வு நாற்காலியை விட்டு எழாமல் முனிசிபாலிட்டியை கைபேசியில் அழைத்தார்.
லட்சுமி துவைக்க வேண்டிய துணிகளை ஊறவைத்துவிட்டு வெளியே வந்தபோது வீடுகளை விட்டு ஒவ்வொருவராக வெளியே வந்திருந்தனர். கடைசி வீட்டு ராஜம்மாள் மட்டும் வரவில்லை. ராஜம்மாள் மூன்று மாதங்களுக்கு முன்பு தான் வயதுக்கு வந்த மகளோடு, அங்கே குடிவந்தாள். மகளை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தாள். அவள் தொள தொளப்பான நைட்டியைத் தவிர வேறு ஆடை எதுவும் அணிந்து லட்சுமி பார்த்தது இல்லை. அவளது வலதுபக்க கன்னத்தில் பச்சையாக மச்சம் பைசா அளவு படர்ந்திருந்தது. ராஜம்மாள் வீட்டு வேலைக்குப் போனாள். காலையில் போனால் வேலைகளை முடித்துவிட்டு மதியத்திற்கு மேல் வீடு திரும்புவாள். யாரிடமும் அதிகம் பேசமாட்டாள்.
சற்று நேரத்தில் முனிசிபாலிட்டியில் இருந்து பெரிய தொரட்டியுடன் நாகராஜன் வந்துவிட்டார். பாலத்தின் அடியில் தொரட்டிக் குச்சியை உள்ளே விட்டு இழுத்ததும், உரச்சாக்கு பொட்டலம் ஒன்று வெளியே வந்தது. நாகராஜன் இறுக கட்டியிருந்த பொட்டலத்தை அவிழ்த்த பொழுது தெருவே கூடி நின்றது. உள்ளே ரோஜாநிறத்தில் அப்பொழுது தான் பிறந்த பெண் குழந்தை பிணமாக கிடந்தது. அய்யோ... என லட்சுமி அலறிவிட்டாள். இது யாரு குழந்தை? எப்படி வந்தது? என்ற விசாரணையில் தெருமக்கள் இறங்கிய வேளையில் நாகராஜன் புகார் சொல்ல போய்க் கொண்டிருந்தார்.
லட்சுமி நிதானித்துக் கொண்டு குழந்தையின் முகத்தை உற்று கவனித்தாள். குழந்தையின் வலது கன்னத்தில் மெலிதாக மச்சம் படர்ந்திருந்தது. அவசரமாக திரும்பி ராஜம்மாளின் வீட்டைப் பார்த்தாள். அது பூட்டியிருந்தது. ஈக்கள் மொய்க்க ஆரம்பித்திருந்த குழந்தையை பத்திரமாக கையில் எடுத்துக்கொண்ட லட்சுமி அதற்கு உயிர் கொடுக்க முடியாதா? என்ற ஏக்கத்துடன் பிள்ளைப் பேறற்ற தன் வற்றிய வயிற்றுடன் சேர்த்து குழந்தையை அணைத்துக் கொண்டாள். உயிர்க்காற்றின் உந்துதலில் குழந்தை லேசாய் நெளிவது போலிருந்தது. ஆச்சர்யத்துடன் லட்சுமி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே வீறிட்டு அழுத குழந்தை தன் இருப்பை வெற்றிகரமாக உலகிற்கு அறிவித்தது.