திருப்பூர், மே 31- உடுமலைபேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் புனைந்த பொய் வழக்கில் இருந்து வாலிபர் சங்க நிர்வாகிகளை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சேலத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையை திறக்கவலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்றோர் மீது சேலம் காவல் துறை பொய் வழக்குப் பதிவு செய்தது. இதைக் கண்டித்து உடுமலைப்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆர்.அன்பழகன், கி.கனகராஜ், ஆர்.வி.வடிவேல், க.மகாதேவன், ஆ.பஞ்சலிங்கம் ஆகியோர் மீது உடுமலை காவல்துறை பொய் வழக்குப் பதிவு செய்தது. உடுமலை நீதித்துறை நடுவர் மன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் பொய் வழக்கைத் தள்ளுபடி செய்த நீதித்துறை நடுவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் ஐந்து பேரையும் விடுதலை செய்தார். இந்த வழக்கில் வாலிபர் சங்கத்தினருக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் எவ்விதகட்டணமும் பெறாமல் நீதிமன்றத்தில் வாதாடினார். அவருக்கு வாலிபர் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.