tamilnadu

உடுமலை ,அவிநாசி மற்றும் திருப்பூர் முக்கிய செய்திகள்

காவல் நிலையத்தில் டிக்-டாக்: இளைஞர் கைது

உடுமலை, ஜூன் 2-மடத்துக்குளம் காவல் நிலையத்தில் டிக்-டாக் பதிவிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் காவல் நிலையம் முன்பு டிக்-டாக் மூலம் இரு இளைஞர்கள் பாடுவது போன்று காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், எங்களுக்கு எதிராக சாட்சி சொன்னால், கோர்ட்டு வாசலில் வெட்டுவோம் என்று மிரட்டும் தொனியில் ஒரு இளைஞர் கையை காட்டுகிறார். இது டிக்-டாக்கில் பரவியது.இதுகுறித்து வந்த புகாரின் பேரில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி உத்தரவின் பேரில் மடத்துக்குளம் ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு இரு இளைஞர்களையும் தேடி வந்தனர். விசாரணையில் உடுமலை கணியூரை சேர்ந்த துரைபாண்டி மற்றும் பிரகாஷ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து துரைபாண்டியை காவல்துறையினர் கைது செய்தனர். பிரகாசை தேடி வருகின்றனர். துரைபாண்டி மீது மடத்துக்குளம் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளது. இந்நிலையில் தினமும் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்து போடவேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுக்கப்பட்டார். அதன்படி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு திரும்பும் போது எதிர் தரப்பினரை மிரட்டுவதுபோல் டிக்-டாக் காட்சி அமைக்கப்பட்டது தெரியவந்தது.  

ஷேர் ஆட்டோக்களை காவல்துறையினர் ஆய்வு

அவிநாசி, ஜூன் 2-அவிநாசி அடுத்த சேவூர் பகுதியில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களை காவல்துறையினர் ஞாயிறன்று  ஆய்வு  செய்தனர். அவிநாசி ஒன்றியம், சேவூரில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் உள்ளன. இதில் சில ஷேர் ஆட்டோக்கள்  விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக செல்வதும்,  கட்டுப்பாடு இன்றி அதிகமாக பயணிகளை ஏற்றி செல்வதாகவும், தடைசெய்யப்பட்ட ஒலிப்பான்கள் பயன்படுத்துவதும், சாலையில் செல்லும் போது அதிக சப்தத்துடன் பாடல்கள் ஒலிப்பதும், ஆட்டோக்கள் உரிய ஆவணம் இன்றியும் மற்றும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல்  இயக்கப்படுவதாக புகார் வந்தது. இந்நிலையில் கடந்த மே 26ந் தேதி (ஞாயிறன்று) தனியார் திருமண மண்டபத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு  காவல்துறையினர் ஆலோசனைகளும், அறிவுரையும் வழங்கினர். இதையடுத்து சேவூர் காவல்துறையினர் ஞாயிறன்று 20க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை ஆய்வு செய்தனர். இதில் காவல்துறையினர்  அங்கீகாரம் வழங்கியதாக ஷேர் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தன. ஆனால் 15 ஆட்டோக்கள் மட்டும் முறையான ஆவணங்கள் வைத்திருந்தது. மீதி 5 ஷேர் ஆட்டோக்களில்   முறையான ஆவணங்கள் இன்றி இயங்குவதாக தெரிய வந்தது.  இந்த ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு சேவூர் காவல்  நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டது.

கண்வலி விதை கிலோ ரூ.3,500 என விலை நிர்ணயம் அதற்கு குறைவாக விற்பதில்லை என்று விவசாயிகள் உறுதி 

 திருப்பூர், ஜூன் 2 –திருப்பூர் மாவட்டத்தில் கண்வலி விதை விளைவித்துள்ள விவசாயிகள் அதற்கு குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.3,500 என நிர்ணயித்து உள்ளனர். மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் கண்வலி விதைக்கு ரூ.3,500க்கு குறைவாக கொள்முதல் செய்ய வந்தால் விற்பனை செய்வதில்லை என்றும் முடிவு செய்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் மூலனூர், தாராபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தோட்டக்கலைப் பயிராக செங்காந்தள் எனும் கண்வலி விதை சாகுபடி 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டு உள்ளது. இப்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவு செய்து விதை உற்பத்தி செய்கின்றனர். இந்நிலையில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் காரணமாக கண்வலி விதையை மிகவும் விலையைக் குறைத்து கொள்முதல் செய்யும் நிலை உள்ளது. எனவே விவசாயிகளுக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. மருந்துகள் தயாரிப்பில் மூலப்பொருளான கோல்சிசின் எனப்படும் வேதிப்பொருள் இதில் அதிகம் இருப்பதால் விதைகள் கிலோ ரூ.4 ஆயிரம் வரை வாங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் முதல் ரூ.2,500க்கும் குறைவாக இடைத்தரகர்கள் விலையைக் குறைத்து வாங்குகின்றனர். இந்நிலையில், விளைபொருளுக்கான விலையை விவசாயிகளே நிர்ணயம் செய்யும் வகையில் திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கண்வலி விதை உற்பத்தி விவசாயிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் விதை விலை நிர்ணய கூட்டம் சனியன்று மூலனூரில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான குறைந்தபட்ச விலை ஒரு கிலோவுக்கு ரூ.3,500 என நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கு குறைவான விலைக்கு வியாபாரிகள் கேட்டால், கண்வலி விதையை விற்பனை செய்வதில்லை எனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் அரசுத்தரப்பில் கண்வலி விதைக்கு உரிய விலையை நிர்ணயம் செய்வதோடு, இதனை அங்கீகரிக்கப்பட்ட பயிராக இணைத்து மானிய உதவிகளை வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கண்வலி விதை விவசாயிகள் ஒருங்கிணைப்பாளர் பழ.இரகுபதி கூறினார்.