கோவை, அக்.16- கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் விடுதலை பசுமை பயணம் என்னும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் புதனன்று விடுதலை பசுமை பயணம் எனும் மரக் கன்றுகள் நடும் விழா மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார், நல்லறம் அரக்கட்டளைத் தலைவர் எஸ்.பிஅன்பரசன், பேக்கர் ஹெயூக்ப் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் அஷிஸ்பந்தாரி, கோவை மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேசுகையில், தற்போது அனைத்து தரப்பு மக்களும் காற்று மாசு குறித்து நன்கு கற்று கொண்டுள்ளனர். நாம் அனைவரும் ஒரு மரங்களையாவது நடாமல் போனால் நிச்சயம் ஒரு நாள் நாம் அனைவரும், நாம் வாழும் பகுதிகளிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சுமக்க கூடும். தற்போது மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே இதே பகுதியில் சுமார் 2.50 ஏக்கர் பரப்பளவில் நடப்பட்ட சுமார் 3 ஆயிரம் மரங்கள் தற்போது வளர்ந்து மிகவும் அடர்ந்து காணப்படுவதை பார்க்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதே வேளையில் இதை தவறாமல் பராமரிப்பதுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள். அரசுடன் இணைந்து செயலாற்றி வரும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், நீராதாரங்களை பராமரிப்பது, மரக்கன்றுகள் நடுவது, பசுமை பகுதிகளை உருவாக்குவது, மூலிகை வனங்களை அமைப்பது, அழிந்து வரும் நாட்டு மர இனங்களை காப்பது என அனைத்து பணிகளையம் திறம்பட செயல் படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இச்செயல் களில் கோவை மாவட்டம் மற்ற மாவட்டத்திற்கு முன்னோடியாகவும் திகழ்ந்து வருவது பாராட்டுக்குரியது. தற்பொழுது வேம்பு, ஆலமரம், மகாகனி, நரிவிழி, இருவாச்சி, ஈட்டி, உசில், ஆயன், பலா, நாவல் போன்ற பெரிய மரங்களும், மருத்துவ குணங்கள் நிறைந்த அத்தி, மலைநெல்லி, மரக்கன்றுகளும், பூவரசு, புங்கன், கொய்யா, மா போன்ற நடுத்தரமாக வளரக்கூடிய மரங்களும், முந்திரி இழுப்பை, மகிழம், பாதாம், ஆவாரை, வெல்வட், பிக்கோனியா உள்ளிட்ட மரக்கன்றுகளும் யானைக்குன்று மணி போன்ற பல்வேறு நாட்டு இன மரக்கன்றுகள் நடப்படவுள்ளது. இதேபோல் தன்னார்வலர்களால், கோவை மாவட்டத்தை செழிக்க, நீர்வளம் பெருக மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.