tamilnadu

img

குடிநீர் பஞ்சத்தை போக்க போர்க்கால அடிப்படையில் தீர்வு காண்க கோவை மாவட்ட ஆட்சியரிடம் பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்

கோவை, ஜூன் 4-கோவையில் நிலவும் குடிநீர்பிரச்சனைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினார். இதுதொடர்பாக பி.ஆர்.நடராஜன் எம்.பி., செவ்வாயன்று கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியை சந்தித்து மனுஒன்றினை அளித்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பி.ஆர்.நடராஜன் கூறியதாவது,  கோவை மாவட்டத்தில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. பொதுமக்கள் குடிநீருக்காக அலைந்து வருவதைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் குடிநீர்பஞ்சத்தை போக்க உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கோவை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை இருக்கும் பகுதிகளில் லாரிகள் மூலம் கோவை மாநகராட்சி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினோம். மேலும், கோவை ஜீவா நகர் பகுதி மக்கள் நீண்டகாலமாக அப்பகுதியில் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் நீர்நிலைப் புறம்போக்கிலோ, தனியாருக்கு சொந்தமான இடத்திலோ குடியிருக்கவில்லை. இவர்கள் குடியிருக்கும் இடத்தை கிரையம் செய்துகொடுப்பதாக குடிசை மாற்று வாரியம் பணம் வசூலித்துள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை அளித்து நீதிமன்ற உத்தரவை பெற்று இம்மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஆகவே குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் தான் இருப்போம் என சொல்பவர்களை கட்டாயப்படுத்தி அவர்களை அப்புறப்படுத்த கூடாது.  தற்போது அங்கு வசிப்பவர்களை அங்கேயே குடியிருக்க அனுமதிக்க வேண்டும். அம்மக்கள் நீதிமன்றத்திற்கு சென்று மாற்று உத்தரவை பெறும்வரை மாவட்ட நிர்வாகம் அவர்களுக்குக் கால அவகாசம் வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டோம். இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியரும் உரிய பரிசீலனை செய்வதாக உறுதியளித்துள்ளார். இதேபோல் கோவை மாநகரத்திற்குள் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. இதனைத் தடுக்க காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை  மேற்கொண்டு கண்காணிப்புப் பணியை  தீவிரப்படுத்த வேண்டும்.  மேலும் பீளமேடு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சப்வேகட்டாத காரணத்தால் அப்பகுதிமக்கள் இரண்டு கிலோமீட்டர்சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது.இதனால் பொதுமக்கள் நாள்தோறும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த மேம்பாலத்தில் சப்-வே அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் பேசியுள்ளேன் என்று கூறினார். இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளரைச் சந்தித்து முறையிட இருப்பதாகவும் தெரிவித்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியருடனான சந்திப்பின் போது ஜீவா நகர் மக்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.