tamilnadu

திருப்பூர் முக்கிய செய்திகள்

தாராபுரம் பகுதி குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கோரி


திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு


திருப்பூர், ஏப். 22 -திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பனங்காட்டு வலசு, பட்டுத்துறை, முருகூர் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வந்து கொண்டிருந்த நிலையில்,கடந்த 5 மாதங்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்கள் அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று குடிநீர் பிடித்து வந்தனர். தற்போது, அங்கு உள்ளவர்கள் குடிநீர் தர மறுப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் ஊருக்கு அருகே உள்ள நான்கு ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து கிணற்று நீரை கொடுக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் குடிநீர் வழங்கக் கோரி மனு அளித்த நிலையில், அவர் அலட்சியமாகபதில் அளித்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதையடுத்து பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்களன்று முற்றுகையிட்டனர். உடனடியாக தங்கள் கிராமங்களுக்குக் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.



திருப்பூர் : அதிமுக வேட்பாளர் மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார்


திருப்பூர், ஏப்.22-திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் தேர்தல் அலுவலரிடம் புகாரளித்துள்ளார்.திருப்பூர் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்வாக்களிக்கும்போது தனது கட்சிக்காரர்களை அதிகளவு வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்ததாகவும், தேர்தல் விதிமுறை மீறலாக வாக்குப்பதிவு செய்துவிட்டு இரட்டை இலை சின்னத்தை காட்டியதாகவும் அதற்கு ஆட்சேபணை தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முகவர் சக்திவேல் என்பவர் தாக்கப்பட்டார். இதனையடுத்து, தன்னை தாக்கியதாகவும் இதற்கு காரணமான வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன் மற்றும் அதிமுக கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , தற்போதும் அதிமுகவினரால் தனக்கு பாதிப்பு ஏற்படவாய்ப்பிருப்பதால் பாதுகாப்பு வழங்க கோரி சக்திவேல் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகாரளித்துள்ளார்.