திருப்பூர் மாவட்ட அஞ்சலகங்களில் ஆதார் அட்டை பெறலாம்
திருப்பூர், மே 9 –திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்கள் மூலமாக ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் கோபிநாதன் தெரிவித்துள்ளார். திருப்பூர் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் பொதுமக்கள் இலவசமாக ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கலாம். மேலும், ஆதார் அட்டையில் திருத்தம் செய்யவும், புதிய தகவல்களை பதிவு செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் தாராபுரம் தலைமை அஞ்சலகங்கள், திருப்பூர் காட்டன் மார்க்கெட், திருப்பூர் வடக்கு, கிழக்கு, பஜார், காந்திநகர், அனுப்பர்பாளையம், வீரபாண்டி, இடுவம்பாளையம், சேவூர், பெருமாநல்லூர், அவிநாசி, கரடிவாவி, கேத்தனூர், குப்புசாமிநாயுடுபுரம், சுல்தான்பேட்டை, பல்லடம், மூலனூர், முத்தூர், நத்தக்காடையூர், வெள்ளக்கோவில், எல்லீஸ்நகர், காங்கேயம் ஆகிய துணை அஞ்சலகங்களிலும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.இந்த அஞ்சலகங்களில் புதிதாக ஆதார் அட்டை பெற கட்டணம் இல்லை. புதிய தகவல்களைப் பதிவேற்றம் செய்ய, திருத்தம் செய்ய ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், பெயர், முகவரி மாற்றம் செய்ய குடும்ப அட்டை, பான்கார்டு, மதிப்பெண் சான்றிதழ், ஆயுள் காப்பீடு சான்றிதழ் போன்ற ஏதேனும் ஒன்றை கொண்டு வர வேண்டும். இம்மாவட்டத்தில் உள்ள மக்கள் இந்த சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அரசு தொழிற்பயிற்சி (ஐடிஐ) சேர்க்கை அறிவிப்பு
தாராபுரம், மே 9-தாராபுரம்அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தில், ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் பொறியியல் தொழில்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற 8ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்புதேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். ஓராண்டு படிப்புகளான அச்சு வார்ப்பவர், இயந்திர கலப்பை செய்பவர் மற்றும் இரண்டாண்டு படிப்புகள் பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வயர்மேன், ஊழுநு-உற்பத்தி மற்றும் தயாரிப்பு, Operator Advance Machine Tool ஆகிய பிரிவுகள் உள்ளது. இத்தொழிற் பிரிவுகளுக்கு www.skilltraining.tn.gov.in
என்ற இணையதள மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையவிவரங்கள் தொழில்பிரிவுகள் இவற்றிற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன. மேலும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளத்திலே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்ற விபரம் குறிப்பிட வேண்டும். மாணவர் விரும்பினால் பிற மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கு தனித்தனியாக சமர்ப்பிக்கவேண்டும். மதிப்பெண் அடிப்படையில் கடிதம் தாங்கள் கொடுத்துள்ள முகவரிக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க தெரியாதவர்கள் மற்றும் விளக்கம் தேவைப்படுவோர் தாராபுரத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு பள்ளி மாற்றுச்சான்றிதழ் மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்று, ஆதார் கார்டு மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசிதேதி மே.31ந் தேதியாகும். மேலும் 04258 230307 ,9443592765, 9894783226 ஆகிய தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்களுக்கு அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.