திருப்பூர், ஏப். 25 –தண்ணீர் உரிமைக்கான உலகளாவிய போராட்டங்கள் காரணமாக தண்ணீர் தனியார்மயம் என்பது தோல்வி அடைந்து வருகிறது என்று எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் கூறினார்.திருப்பூர் நண்பர்கள் வட்டத்தின் 24ஆம் சந்திப்பு உலகப் புத்தக தினம் செவ்வாய்க்கிழமை மாலை செரீப்காலனி வாழ்க வளமுடன் மையத்தில் நடைபெற்றது.நேஷனல் சில்க்ஸ், நேஷனல் புத்தக நிலையம் உரிமையாளர் அருணாசலம் தலைமை தாங்கினார். கவிஞர் சேக்ஸ்பியர் பிறந்த தினத்தன்று உலகப் புத்தக தினம் உருவான விதம் மற்றும் புத்தக வாசிப்பு அனுபவங்களை தமிழறிஞர் நீறணி பவளக்குன்றன், வெற்றிவேல், லக்ஷ்மணன், ரெத்னம், சுப்ரபாரதிமணியன் உள்ளிட்டோர் பகிர்ந்து கொண்டனர்.சுப்ரபாரதிமணியன் “தண்ணீர் யுத்தம்“ என்ற பெயரில் சுற்றுச்சூழல் நூல் எழுதிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இப்போது தண்ணீர் வணிகப் பொருளாகிப் போனதும், தண்ணீரால் மூன்றாம் உலக யுத்தம் என்பதும்தான் முன்னிற்கும் சுற்றுச்சூழல் பிரச்சனையாக உள்ளது என்று சுப்ரபாரதிமணியன் கூறினார். மேலும் தண்ணீரை கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் உலகளவிலான ஏற்பாடுகள் உள்ளன. அதேநேரம் தண்ணீர் விற்பனைக்கல்ல, தண்ணீரை ஒரு அடிப்படை உரிமையாக்கவும் கோரி பெரும் போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. தண்ணீர் தனியார்மயமாக்கல் என்பது தோல்வியடைந்து வருவதை பல நாடுகளின் போராட்டங்கள் சுட்டுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.இந்நிகழ்வில் ரபேல் ஊழல் பற்றி விஜயன் எழுதிய பாரதி புத்தகாலயம் நூல் மற்றும் திருப்பூர் கனவு இதழ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. நிறைவாக நேஷனல் சீனிவாசன் நன்றி கூறினார்.