நாமக்கல், ஏப். 29-கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வுகாணக்கோரி பள்ளிபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் தட்டாங்குட்டை ஊராட்சியில் சடையம்பாளையம், காந்திநகர் பகுதியில் 25க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இதில் தறி ஓட்டுபவர்கள், பாவு போடுபவர்கள், நூல் ஓட்டுபவர்கள் என அனைத்து பிரிவுகளிலும் 750க்கும் மேற்பட்ட ஆண்,பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இத்தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு வருடமாக விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். ஏற்கனவே, கடுமையான விலைவாசி உயர்வால் இத்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உரிமையாளர்கள் கூலி உயர்வு குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தி தீர்வு காண முன்வராமல் இருப்பது தொழிலாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் திங்களன்று சிஐடியு நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தட்டான் குட்டை பகுதியில்நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்திற்கு சங்கத்தின் கிளை தலைவர் எம்.மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எம். அசோகன், மாவட்ட பொருளாளர் பாலுசாமி, பள்ளிபாளையம் வடக்கு சங்க ஒன்றிய செயலாளர் எஸ். தனபால் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிபிஎம் குமாரபாளையம் நகர செயலாளர் இ.பி.ஆறுமுகம், வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.ஆர்.முருகேசன், ஓலப்பாளையம் கிளைச் செயலாளர் நடராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முடிவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. ரங்கசாமி நிறைவுரையாற்றினார். இப்போராட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.