tamilnadu

img

மோடி அரசால் கைவிடப்பட்ட கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி

கோவை சிங்காநல்லூர் அருகில் உள்ள வரதராஜபுரத்தில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் (இஎஸ்ஐ) மருத்துவக்கல்லூரி உள்ளது. இங்கு 1971 ஆம் ஆண்டு இஎஸ்ஐ மருத்துவமனை துவக்கப்பட்டது. அதே வளாகத்தில் 32 ஏக்கர் பரப்பளவில் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி அமைக்க தொழிலாளர் நலத்துறை முடிவு செய்தது. இஎஸ்ஐ சார்பில் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. கோவை இஎஸ்ஐ கல்லூரிக்கான கட்டுமான பணிகள் 2013ஆம் ஆண்டே முடிக்கப்பட்டுவிட்டன. கல்லூரி பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் சிலர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் மோடி தலைமையில் புதிய அரசு அமைந்தது.மோடி அரசு பெரும் முதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்த தொடங்கியது. அந்த கொள்கைக்கு முரணான 13 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை கைவிடுவது என முடிவு செய்தது. மாணவர்கள் வேறு கல்லூரிகளில் சேர்ந்து படிக்கவும் உத்தரவிட்டது. இது ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த சென்னை உள்ளிட்ட இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் படித்துவந்த மாணவர்களை கொந்தளிக்க வைத்தது. மாணவர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தியது. தொழிலாளர்கள் ஆதரவளித்தனர். இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு 2016இல் தமிழக அரசே இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியை எடுத்து நடத்துவதாக இஎஸ்ஐ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. மோடியே நேரில் வந்து கோவையில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மாணவர் போராட்டம் மோடி அரசை அடி பணிய வைத்தது. மற்ற கல்லூரிகளும் தப்பி பிழைத்தன.


தொழிலாளர் பணம் வீணாகலாமா?


கல்லூரியை திறக்க மத்திய அரசே தடையாக இருந்த காலத்தில் மருத்துவத்துறை பேராசிரியர்களும், அலுவலர்களும் வேறுபணி தேடி சென்று விட்டனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாட்டில் இருந்த பழைய மூன்று மாடிக் கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தும், பூட்டியே வைக்கப்பட்டிருந்தன. 32 லிப்ட்கள் அமைக்கப்பட்டு அதில் ஒன்றிரண்டு மட்டும் இயக்கப்பட்டன. 500 படுக்கை வசதிகளுடன் ஏற்கனவே நோயாளிகள் நிறைந்து காணப்பட்ட நிலை மாறி 200 படுக்கைகள் அளவுக்கே பயன்பாட்டில் இருந்து வந்தது. புற நோயாளிகளின் வருகையும் குறைந்தது. தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணம் இப்படி வீணாகலாமா என தொழிற்சங்கத்தினர் கேள்வி எழுப்பினர்.


சட்ட அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள்


கோவை உட்பட நாடு முழுவதும் 13 மருத்துவ கல்வி நிறுவனங்களை தொடங்கப்பட்டதன் பின்னணி குறித்து அன்றைய கோவை நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினரும், தற்போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான பி.ஆர்.நடராஜன் கூறியதாவது: 1948 ஆம் ஆணடு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி ஏற்கனவே செயல்பட்டு வந்தன.2012-13இல் தொழிலாளர்கள் செலுத்திய பணம் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் இஎஸ்ஐ வசம் இருந்தது. அதில் நாடு முழுவதும் 13 மருத்துவ கல்வி நிறுவனங்களை அமைக்க முடிவுசெய்யப்பட்டது. தமிழகத்தின் தொழில் நகரமான கோவையில் இந்த கல்லூரி அமைய கடும் முயற்சி தேவைப்பட்டது. ரூ.580.57 கோடி முதலீட்டில் இன்று தொழிலாளர்களின் சொத்தாக மருத்துவக் கல்லூரி உள்ளது. இஎஸ்ஐ கல்வி நிறுவனங்களை மூட மத்திய அரசு முடிவு செய்ததால் தமிழக அரசே நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது கடந்த 2 ஆண்டுகளாக, நீட் தகுதி அடிப்படையில் 65 மாணவர்களை தமிழக அரசும், 15 மாணவர்களை மத்திய அரசும் நிரப்புகின்றன. மொத்தமுள்ள 100 இடங்களில் மீதமுள்ள 20 இடங்கள் இஎஸ்ஐ பயனாளிகளாக உள்ள தொழிலாளர் குடும்பத்து பிள்ளைகளுக்கு கிடைக்கிறது என்றார்.


தொகுப்பு: சி.முருகேசன்