tamilnadu

ஜனநாயகக் கடமையாற்றியோருக்கு மார்க்சிஸ்ட் கட்சி நன்றி

திருப்பூர், ஏப். 18 -திருப்பூர் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் முன்வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்களுக்கும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற அல்லும், பகலும் பாடுபட்ட செயல்வீரர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளது.இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் வியாழயனன்றுவிடுத்துள்ள செய்தியறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்திய நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 8 சட்டமன்றத் தொகுதிகள் திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய ஐந்து மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் இடம் பெற்றுள்ளன.இந்த தேர்தலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அக்கறையுடன் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும், குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர், மூன்றாம் பாலினத்தார் உள்ளிட்ட அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.


அத்துடன், இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தவரை நாட்டின் நல்ல எதிர்காலத்தையும், ஜனநாயகத்தையும், மக்கள் வாழ்க்கையையும், தொழில், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி செயல்வீரர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்கள் உழைப்பை வழங்கி, மக்களிடம் ஆதரவு திரட்டி அரும்பணி ஆற்றியுள்ளனர். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, காங்கிரஸ், கொமதேக, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கும், ஆதரவு தெரிவித்த அனைத்து தோழமை அமைப்புகளுக்கும், நிர்வாகிகள், செயல்வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டையும், நன்றியையும் உரித்தாக்கிறோம். இவ்வாறு செ.முத்துக்கண்ணன் கூறியுள்ளார்.