இளம்பிள்ளை, மே 30- சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் கூட்டுப்பண்ணை திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் உழவு இயந்திரங்கள் வழங்கப் பட்டன. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் 2019-20 ஆம் நிதியாண்டில் கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் எர்ணாபுரம், கெடிக்காவல், தப்பக்குட்டை, அ.புதூர் ஆகிய கிராமங்களில் 4 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்களுக்கு வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா முன்னிலையில் சேலம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் பா.கண்ணன் கலந்துகொண்டு வேளாண்மை உழவு கருவிகளான பவர் வீடர், பேபி வீடர், பவர் டில்லர், ரொட்டவேட்டர், தீவனம் வெட்டும் கருவி, ஒன்பது கலப்பை, ஐந்து கலப்பை, சுழல் கழப்பை, வைக் கோல் பேலர் ஆகியவற்றை உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கினார். இதில் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தமிழக அரசின் கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ் தொகுப்பு நிதி தலா ரூ.5 லட்சம் வீதம் நான்கு குழுக்களுக்கும் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மகுடஞ்சாவடி வேளாண்மை உதவி இயக்குநர் வி.மணிமேகலா தேவி, வேளாண்மை அலுவலர் பழனிசாமி, துணை வேளாண்மை அலுவலர் ஸ்ரீரங்கன், உதவி வேளாண்மை அலுவலர்கள் தங்கவேல், அசோக்குமார், மாவிருச்சான், காசி விஸ்வநாதன் மற்றும் அம்மா திட்ட அலுவலர்கள் விஜயகுமார், கார்த்திகேயன் மற்றும் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.