சுதந்திரத்திற்கு முன்பே 1912 ஆம் ஆண்டு கோயமுத்தூரில் கரும்பு ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பழமையான நிறுவனமாக இது பல்வேறு தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்ப வளரும் உயர்வகை கரும்பு ரகங்களை உருவாக்கி வருகிறது. நுாற்றாண்டு பெருமை மிக்க இந்த நிறுவனத்தில் தற்போது, கரும்பு ஆராய்ச்சியாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என சுமார் 200 பேர் பணியாற்றுகின்றனர். இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு ரகங்களை அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளது இந்த கரும்பு இனப்பெருக்க நிறுவனம். இதனால் முன்பு சர்க்கரை இறக்குமதி செய்து வந்த நமது நாடு தற்போது மிகப் பெரும் சர்க்கரை உற்பத்தியாளராக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும், கோவையின் கரும்பு ரகங்களே 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக பயிரிடப்படுகின்றன. இதுமட்டுமின்றி கோவையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கரும்பு ரகங்கள் தற்போது 25க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பயிரடப்படுகின்றன. இவ்வாறு பல புதிய ரகங்களைக் கொண்ட விதைக்கருவூலமாக கோயமுத்தூரில் கரும்பு ஆராய்ச்சிமையம் திகழ்கிறது. எதிர்காலத்திற்கு தேவையான ரகங்கள், தொழில்நுட்பம், சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட ஆராய்ச்சிகள் இங்கு நடைபெறுகிறது.
கொத்தடிமைகளாக தொழிலாளர்கள்
ஆராய்ச்சி மற்றும் இனப்பெருக்கம் செய்யும் பணிகளுக்கு கோவையில் சுமார் 400 ஏக்கர் விளைநிலம் உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் வேலை செய்து
வந்தனர். 8 மணி நேர வேலைதான்,எனினும் அதிகாரிகள் சொல்லும் அனைத்து வேலைகளையும், வீட்டு வேலைகள் உட்பட செய்ய வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் வேலையிலிருந்து நீக்கப்படுவர். இந்நிலையில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு 470க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் தொழிலாளர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர். 7 ஆண்டுகளாக வழக்கை முடிவுக்கு கொண்டு வரவிடாமல் இழுத்தடித்தது. இறுதியில் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஆண், பெண் விவசாய தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் பணி வழங்க வேண்டும். பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை ஏற்று நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்தது. மறுபுறம், தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளது.
வழிகாட்டிய சிஐடியு
இதுதொடர்பாக தொழிலாளி லோகநாதன் என்பவர் கூறியதாவது.10மாத பயிர் கரும்பு. நிலத்தை பண்படுத்துவது. பாத்தி கட்டுவது. விதை விதைப்பது. தண்ணீர் பாய்ச்சுவது. கரும்புக்கு மண் அணைப்பது. அளவு, இனிப்பு சத்து ஆகியவற்றை 7 ஆவது மாதத்தில் அளவீடு செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்வோம். 10 மாதங்களில் பூ வரும். இதில் ஆண் பூ, பெண் பூ கண்டறிந்து மகரந்த சேர்க்கை நடைபெறச் செய்வோம். இதிலிருந்து கிடைக்கும் ரகங்களில் சிறந்தவற்றை அடுத்த பட்டத்திற்கு பயன்படுத்துவோம். இவை முடிந்த பிறகு கரும்பு வெட்டி ஆலைகளுக்கு அனுப்ப லாரிகளில் ஏற்றி அனுப்பப்படும். இவ்வாறு ஆண்டு முழுவதும் ஓய்வின்றி, உரிமைகள் ஏதுமின்றி, பணிப்பாதுகாப்பு ஏதுமின்றி வேலை செய்து வந்தோம். அதிகாரிகளிடம் இது தொடர்பாக கேட்டபோது பிரச்னையானது. பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 472 தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். படிப்பறிவற்ற பாமர விவசாய கூலி தொழிலாளர்களான எங்களுக்கு சிஐடியு வழிகாட்டியது. பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருந்தோம். ஆனால், கருங்காலிகளை வைத்து நிர்வாகம் எங்களது உரிமை போராட்டத்தை உடைக்க முயற்சி செய்தது. இதனைக்கடந்து தொழிலாளர் நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியபோதும், அரசு எங்களது கோரிக்கையை நிறைவேற்றாமல் மேல்முறையீடு செய்துள்ளது. அடுத்த நான்கு மாதங்களில் ஓய்வு பெற உள்ளேன். அதற்குள் தீர்ப்பு வருமா என தெரியவில்லை என்றார்.
டில்லி வரை அழைத்துச் சென்ற பி.ஆர்.நடராஜன்
இதேபோல் சந்திரன் என்ற தொழிலாளி கூறுகையில், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கான சட்ட சலுகைகள் அமலாக்க வேண்டும் எனக் கேட்பது தவறா? அரசும், நிர்வாகமும் எங்கள் உழைப்பை அங்கீகரிக்க வேண்டும். நானூற்றுக்கும் மேற்பட்டவர்கள் செய்த வேலைகளை இன்று நூற்றுக்கும் குறைவானவர்களே செய்து வருகிறோம். 153 தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி வழக்கு தொடர்ந்துள்ளோம். அதில் பலர் ஓய்வு பெற்று விட்டனர். அரசு எங்கள் உழைப்பை அங்கீகரித்து உரிய பலன்களை வழங்க மறுக்கிறது. அதேநேரம், முன்பு எம்.பி-யாக இருந்தபோது பி.ஆர்.நடராஜன் அவர்கள் எங்களை டில்லி வரை அழைத்து சென்று அதிகாரிகளை சந்திக்க வைத்தார். மேலும், மத்திய மந்திரி சரத்பவாரிடம் முறையிட்டோம். ஆனால், அதன்பின் வந்த எந்த எம்பியும் எங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை என வேதனையோடு தெரிவித்தார்.
எப்படி வாழ்வது?
மேலும், ரங்கராஜன் என்பவர் கூறுகையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிறுவனத்திற்கு உழைத்துள்ளேன். எந்த பிரயோஜனமுமில்லை. வேலை செய்ய தயாராக இருந்தும் 58 வயது முடிந்து விட்டது என வீட்டிற்கு அனுப்பி விட்டனர். நான் எப்படி வாழ்வது என்றே தெரியவில்லை என கண்ணீர் மல்க தெரிவிக்கிறார். சொந்த நாட்டில் பாதுகாப்புடன் கூடிய வேலை, பணி நிரந்தரம், ஓய்வதியம் உள்ளிட்ட எந்த உரிமையும் இல்லாமல் வாழும் விவசாய தொழிலாளிகளும் இந்திய நாட்டின் பிரஜைகள்தான். அரசமைப்பு சட்டமும், தொழிலாளர் நல சட்டங்களும் இந்த தொழிலாளர்களுக்கு பொருந்தாதா? அகதிகளைப் போல உழைத்து, வாழ்ந்து மடிய வேண்டுமா! நாடாளுமன்ற தேர்தல் நம்மை, நாட்டை ஆள்பவர்களை தேர்ந்தெடுக்கும் வேண்டிய காலமிது. சிந்திப்போம்… செயல்படுவோம்…
மூட துடிக்கும் மோடி அரசு
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 103 ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் உள்ள கரும்பு, நெல், வாழை மற்றும் இறால் ஆராய்ச்சி மையங்களும் அடங்கும். 103 ஆராய்ச்சி மையங்களை 60 ஆக குறைக்க மத்திய பாஜக அரசு கடந்த 2017ல் முடிவு செய்தது. அதன்படி சென்னையில் உள்ள இறால் ஆராய்ச்சி மையத்தையும், கோவையில் உள்ள கரும்பு, வாழை ஆராய்ச்சி மையத்தையும் மூட முடிவு செய்தது. இதனை எதிர்த்து விவசாயிகள், இடதுசாரிகள் உள்ளிட்ட முற்போக்கு அமைப்பினர் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பினால் மோடி அரசு இந்த ஆராய்ச்சி மையங்களை மூடும் முயற்சியை கைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- எஸ்.சக்திவேல்