அவிநாசி, மே 29-அவிநாசி ஒன்றியத்தில் தொடர்ந்து குளம், குட்டைகளில்மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இதனை மாவட்ட நிர் வாகம் தடுக்க முயற்சி எடுக்காதது ஏன்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அவிநாசி ஒன்றியங்களான தெக்கலூர் ,சேவூர்,கருவலூர் ,நம்பியா பாளையம், முறியாடபாளையம், ஆலத்தூர், போத்தம் பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் தொடர் மணல் கொள்ளைநடைபெறுகிறது. இம்மணல் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.8 ஆயிரம் வரை விற்பனைசெய்யப்படுவதாக கூறப்படுகிறது. குளம், குட்டைகள் பாதுகாக்கின்ற வகையில், கனிமவளத் துறை, வருவாய்த் துறை, கிராம நிர்வாக அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பது கடமையாகும். ஆனால் இத்துறையை சேர்ந்தவர்கள் சரிவர கண்காணிக்கப்படுவதில்லை என தெரியவருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மணல் கொள்ளை இரவு நேரங்களில் தான் அதிகளவில் நடைபெறுகிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மணல் கொள்ளை நடைபெற்று உள்ளதாக தெரிய வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலின் போது திருப்பூர் மாவட்ட கனிமவளத் துறையினர் பிடித்த 4 டிப்பர் லாரிகளில், 3 டிப்பர் லாரியின் உரிமையாளர்கள் மீதும் மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு டிப்பர் லாரி ஆளுங் கட்சி பிரமுகருடையது. அதனால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அந்த டிப்பர் லாரி தற்போது வரை வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலை கடந்த ஒரு வாரத்தில் தனியார் தோட்டத்தில் மண் கொள்ளை ஈடுபட்டதாக பொக்லைன் இயந்திரம், டிப்பர் லாரி பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது கேள்விகுறியாகும். மேலும் சில நாட்களுக்கு முன்பு தெக்கலூர் ஊராட்சிக்குட்பட்ட ராணுவ பயிற்சிக் கூடம் எதிரே உள்ள நடு குளத்தில் சுமார் 10 அடி ஆழம் வரை மணல் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மணல் கொள்ளையை மாவட்ட நிர்வாகம், வட்டாட்சியர், கனிமவளத்துறை கண்டு காணாமல் உள்ளது ஏன்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.