அவிநாசி, மே 13-அவிநாசியை அடுத்த முருகம்பாளையம் கிராமப் பகுதியில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாணக்கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர்.அவிநாசி ஒன்றியம், உப்பிலிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட முருகம்பாளையம் கிராமப் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதேபோல், நீண்ட நாட்களாக சாக்கடை துர்வாரப்படாததால் அப்பகுதிமுழுவதும் கடுமையான சுகாதார சீர்கேடுஏற்பட்டு பொதுமக்கள் நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், எரியாத தெரு விளக்குகளை பழுது பார்ப்பது உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்ககோரி திங்களன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முருகம்பாளையம் கிராம மக்கள் மனு அளித்தனர். இம்மனுவினை பெற்றுக்கொண்ட ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஹரிஹரன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.