அவிநாசி, மே 10-அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய 3 சதவிகித அகவிலைப்படியை 1-1-2019 முதல் உடனடியாக வழங்கிட அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி அவிநாசியில் தமிழ்நாடு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விலை வாசிக்கு ஏற்ப 6 மாதத்துக்கு ஒரு முறை அக விலைப்படியை உயர்த்தி வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசும் அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படியை வழங்கி வருகிறது. தற்போது மத்திய அரசு அறிவித்த பிறகும் 1.1.2019 தேதி முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 3 சதவிகித அகவிலைப்படியை இன்னும் தமிழக அரசு வழங்கவில்லை. இதுபற்றி கேட்டால் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. தேர்தல் நடத்தை விதி நடைமுறையில் உள்ளதால் வழங்க முடியாது என்றும் காரணம் கூறுகிறது. அகவிலைப்படியை வழங்குவதற்கும், தேர்தல் நடத்தை விதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அரசு வழங்க மறுக்கிறது.எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதன்படி அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், பொது சுகாதார மையம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தவமணி தலைமை வகித்தார். கருப்பன், விஜயலட்சுமி, சுமதி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி ராமன் உரையாற்றினார். இதில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.