சேலம், ஏப். 30-இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கப்படாததால் முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் வித்யா மந்திர்சிபிஎஸ்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. திங்களன்று இருபதுகும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியின் ஆன்லைன் பதிவில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க சென்றனர். அப்போது எல்கேஜி மாணவர்களுக்கு 10 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கட்ட வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். மேலும், பள்ளியில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் ஆன்லைன் பதிவு செய்ய முடியாது எனவும், அதற்கான சர்வர் செயல்படவில்லை எனவும்தெரிவித்தனர். கடந்த 3 ஆண்டுகளாக இதே பதிலை இந்த பள்ளி நிர்வாகத்தினர் கூறி ஏழை மாணவர்களுக்கு இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கை செய்ய அனுமதி மறுத்துவருகின்றனர் எனப் புகார் எழுந்துள்ளது.இந்நிலையில் பள்ளிக்கு சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரிடமும் இதே பதிலை கூறியுள்ளனர். இதையடுத்து வாலிபர் சங்கத்தின் மாவட்டபொருளாளர் வி.வெங்கடேஷ் தலைமையில் அங்கிருந்த பெற்றோர்களுடன் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்துக்கு சென்றனர். முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரிடம் மனுவை கொடுத்த பெற்றோர்கள் பிரச்சனையை சரி செய்து வைக்குமாறு கோரிக்கை வைத்தனர். மேலும், அரசு அறிவித்த சட்டத்தின்படி மாணவர்களை வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளி அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் வாலிபர் சங்கத்துடன் இணைந்து போராட்டங்கள் நடத்த வேண்டியிருக்கும் என பெற்றோர்கள் தெரிவித்தனர்.