tamilnadu

img

பொள்ளாச்சி கொடூரம் எதிரொலி: 2 பெண்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் எதிரொலியாக இரண்டு பெண்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோவை நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி தமிழீழம் தனது சகோதரி ஓவியாவுடன் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். கோவை மாவட்ட ஆட்சியர்

அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம், தனக்கும் தனது தங்கைக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை மனுவினை அளித்தார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவிகள், பொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்குமா என்ற ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தில் உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால் எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை இருப்பதாகவும் தெரிவித்தனர். எனவே இதற்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து இருப்பதாகவும் மாணவி தமிழீழம் தெரிவித்தார்.