தருமபுரி, மே 10-தருமபுரி, பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.இதுகுறித்து முதுநிலை விரிவாக்க மைய இயக்குநர் (பொ) முனைவர் பொ.மோகனசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது, தருமபுரியில் பெரியார் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தில் வணிகவியல், மேலாண்மையியல், ஆங்கிலம், கணிதவியல், கணினி அறிவியல், இயற்பியல், உயிர்தொழில்நுட்பவியல், புவியமைப்பியல் துறை என 8 முதுநிலை பாடங்களில், நிகழ் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் மே 6 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் மற்றும்தகவல் தொகுப்புகளை இம்முதுநிலை விரிவாக்க மைய அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் ரூ.300 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கட்டணத்தை பதிவாளர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம் என்ற பெயரில் வங்கி வரைவோலையாக சமர்ப்பிக்க வேண்டும். தலித், பழங்குடியின மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்துக்கான விண்ணப்பப் படிவத்தை உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்து கட்டண விலக்கு பெறலாம். முதுநிலை பாடத்துக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களது 5 பருவ மதிப்பெண் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.பெரியார் பல்கலைக்கழக முதுநிலை பாடங்களின் தரமானது தேசிய அளவிலான நெட், செட், கேட் மற்றும் சிஎஸ்ஐஆர் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளன. எனவே, மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 18 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு வரும் ஜூன் 20 ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளர்.