tamilnadu

img

வெளி மாநில தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த ஊருக்கு பயணம் மேட்டுப்பாளையத்தில் செங்கல் உற்பத்தி முடக்கம்

மே.பாளையம், ஏப். 21-கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள, சின்னதடாகம், பெரியதடாகம், வீரபாண்டி, கணுவாய், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தொழிலை நம்பி நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டதொழிலாளர்கள் உள்ளனர். பீகார்,ஒடிசா, அசாம் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செங்கல்சூளைகளில் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலாளர்கள் தீபாவளி மற்றும் தங்களது குடும்ப விழாக்களுக்கு சொந்த ஊர் செல்வதுவழக்கம். தற்போது நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு இத்தொழிலாளர்கள் குடும்பத்துடன் சென்றுள்ளனர். இதனால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கே வழங்கும் கூலிக்கு கிடைப்பதில்லை. விடுமுறை மற்றும் குறிப்பிட்ட நேர வேலை என்ற நிபந்தனையின்றி குறைவான கூலிக்கு ஓய்வின்றி பணியாற்றுவதால் வட மாநில தொழிலாளர்கள் இது போன்ற பணிகளுக்கு அமர்த்தப்படுகின்றனர். இத்தொழிலாளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்றுள்ளதால், வாக்கு எண்ணிக்கையைத் தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை திரும்பி வர மாட்டார்கள் என கூறப்படுகிறது. இதனால் உற்பத்தி பாதிக்கப்படுமோ எனஉற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் மழை மற்றும் குளிர் காலங்களைவிட கோடை காலம் செங்கல் உற்பத்தி அதிகரிக்க உகந்த காலமாகும். இந்நிலையில் தொழிலாளர்கள் இல்லாதது உற்பத்தியாளர்களை மேலும் கவலையடையச் செய்துள்ளது. இது ஒட்டு மொத்த கட்டுமானத்தையே பாதிக்க கூடியதாக உள்ளதால் வெளி மாநில தொழிலாளர்களுக்கு தபால் ஓட்டு வழங்கவேண்டும் என செங்கல் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.