tamilnadu

திருப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைன் வசதி வந்தும் தீராத லஞ்சம்

திருப்பூர், மே 5–தமிழகத்தில் பதிவுத்துறை ஆன் லைன் வசதி செய்யப்பட்டுவிட்டது, இனி இடைத்தரகர்கள், லஞ்ச ஊழலுக்கு இடமில்லை என்று தமிழக அரசு சொல்லிக் கொண்டாலும், திருப்பூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் தீராத பிரச்சனையாக லஞ்சம் வாங்கும் நடைமுறை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.குறிப்பாக திருப்பூர் எண் 2 சார் பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கச் சான்று பெறவும், பதிவு, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் லஞ்சம் தராமல் காரியம் நடப்பதில்லை என்று நிலம், இடம் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.குறிப்பாக வில்லங்கச் சான்றுக்கு ரூ.200 கொடுத்தால்தான் பெற முடியும். நாளொன்றுக்கு சராசரியாக நூறு விண்ணப்பங்கள் செய்யப்படும் நிலையில் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் இதில் மட்டும் லஞ்சமாக பெறப்படுகிறது என்று தெரிவித்தனர்.அதேபோல் பட்டா மாறுதல் ஆன்லைன் மூலம் பெறலாம் என்றாலும் பதிவுத்துறை, வருவாய்த் துறை இடையே மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஆன்லைன் என்பதால் அதில் யாரும் முறைகேடு செய்ய முடியாது என்று கூறப்பட்டாலும் பணம் கை மாறினால் தான் வேலை நடக்கிறது என்று பயனாளிகள் புகார் கூறுகின்றனர்.ஆனால் துறை சார்ந்தவர்களிடம் இது குறித்து கேட்டால், இந்த புகாருக்கு தெளிவான பதில் கிடைப்பதில்லை, தொழில்நுட்ப பிரச்சனைகள்தான் உள்ளன என்று கூறுகின்றனர். சில அலுவலர்கள் நேர்மையாக இருந்தாலும் கூட, பெரும்பாலான அலுவலகங்களில் பணம் கை மாறாமல் வேலை நடப்பதில்லை என்பதே ஆன்லைன் வந்த பிறகும் அனுபவமாக உள்ளது.