tamilnadu

img

அதிமுக- பாஜக கூட்டணியை வீழ்த்துவோம்

நாமக்கல், ஏப்.9-அதிமுக- பாஜக கூட்டணியைவீழ்த்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அறைகூவல் விடுத்தார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ராசிபுரம் பேருந்து நிலையம்அருகில் கட்சியின் பிரதேச குழு செயலாளர் ஜீ.செல்வராஜ் தலைமையில்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தேசத்தின் வரலாற்றில் முக்கியமான தேர்தல். பல்வேறு விளைவுகளை உருவாக்கக் கூடிய தேர்தல். கடந்த ஐந்து ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி புரிந்த மோடி, இந்திய அரசியல் சட்ட அமைப்பை ஒவ்வொன்றாக மோடி தகர்த்து வருகிறார். ஜனநாயகம் மறுக்கப்படுகிறது. மத்திய அரசாங்கத்தை குறை சொன்னால் தேச துரோக வழக்கு பாயும். அரசியல் சட்ட அடிப்படை தகர்க்கப்படுகிறது. இருள் மயமாக இந்தியா மாறுகிறது. நீதித்துறையிலும் பாஜக தலையீடு செலுத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் ஒன்றாகக்கூடி நீதிமன்ற விவகாரத்தில் நீங்கள் தலையிட கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியாவில் அரசு இயந்திரங்களை தனது கை பாவையாக வைத்துக் கொண்டு மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. தில்லியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அதன் தலைவர் அமித்ஷா கூறுகையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 50 ஆண்டுகள் பாஜக தான் நீடிக்கும் என்று கூறினார். 50 ஆண்டுகள் எப்படி நீடிக்க முடியும் என்றால் அடுத்து தேர்தலே நடக்காது, ஜனநாயகம் இருக்காது என்பதைதான் அவர் சூசகமாக கூறுகிறார். அதனால்தான் இந்தத் தேர்தல் முக்கியமான தேர்தல்.


ஜனநாயகத்தை பாதுகாக்க


தமிழகத்தில் நாங்கள் அமைத்திருக்கிற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியானது, மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை பாதுகாக்கும் கொள்கைகளை கொண்ட கட்சிகளை கொண்ட கூட்டணியாகும். இது தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. தொடர்ந்து பல்லாண்டுகாலமாக கூட்டு இயக்கம் நடத்தி உள்ளோம். நீட் தேர்வுக்கு எதிராகவும், கஜா புயல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டும், மீத்தேன் திட்டத்திற்கு எதிராகவும், சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிராகவும் தொடர்ந்து இயக்கம் நடத்தி மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி.அதேநேரம், அதிமுகவில் இடம்பெற்றுள்ள பாமக 8 வழி சாலை அமைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இவர்களோடு இன்று கூட்டணி வைத்துள்ளனர். இப்படி பல்வேறு குழப்பங்கள் ஆன கூட்டணியை அதிமுக பாஜக அமைத்துள்ளது. அதிமுக கூட்டணியை பொருத்தவரைக்கும் கொள்கை கூட்டணி அல்ல கொள்ளைகூட்டணியாகும்.


50 ஆயிரம் தொழில்கள் அழிப்பு


இதேபோல், ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் முக்கிய சிறு குறு தொழில்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. தமிழகத்தில் நாமக்கல் உட்பட பலமாவட்டங்களில் விசைத்தறிகள் அழிந்துவிட்டன. மேலும், நாமக்கல்மாவட்டத்தில் லாரி, ரிக், பஞ்சாலைகள், விவசாயம் உட்பட முழுவதுமாக அழிந்து விட்டன. இதுமட்டுமின்றி, 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 எட்டு மணிக்கு அறிவித்த ரூ.500 ரூ.1000 செல்லாது என்றுஎடுத்த நடவடிக்கையால் தொழில்கள் நடத்தமுடியாமல் பல தொழிற்சாலைகள் இழுத்து மூடும் நிலை ஏற்பட்டது. புதிய தேசம் உருவாகிறது என்று ஜிஎஸ்டி அறிவித்து 50 ஆயிரம் தொழில்களை அழித்துவிட்டனர். 50 லட்சம் தொழிலாளர்கள் வேலையை இழந்து விட்டனர்.ஐந்து ஆண்டுகால மோடி ஆட்சி செயல்பாட்டால் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டது. குறிப்பாக, நீட் தேர்வை புகுத்தியபோது அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்தனர். மிகப் பெரிய இயக்கத்தை நடத்திய பிறகு நீட் சட்டமே வேண்டாம் என்று தமிழகத்திற்கு விதிவிலக்கு வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தில்லிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதற்குபாஜக ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது. அதிமுக இதனை தட்டிக் கேட்கவில்லை. மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக பறிக்கும்போது அதிமுக வேடிக்கை பார்த்தது. தமிழகத்தை எடைபோட்டு விற்கக்கூடியவேலையை அதிமுகவினர் செய்தனர்.


பொள்ளாச்சி கொடுமை


பொள்ளாச்சியில் மாணவிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, பணம் பறித்த கொடுமையை செய்தனர். தொடர்ந்து 7 ஆண்டுகளாக நடைபெற்ற இக்கொடுமை காவல் துறைக்குத் தெரியாதா? ஆளுங்கட்சிக்கு தெரியாதா?. பாதிக்கப்பட்ட மக்களை காவல் துறையினர் கடுமையாகத் தாக்கிய போது தான் பிரச்சனை வெளியே வந்தது. முன்னமே அதனைஏன் விசாரிக்கவில்லை, காவல்துறையினர் இதனை மூடி மறைக்க பார்த்தனர். ஆளுங்கட்சியின் முக்கியமான நபரின் மகன் இக்கொடூரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காத டிஎஸ்பி. எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தலையிட்டு கூறிய பிறகும் நடவடிக்கை இல்லை. இதுதான் அதிமுக அரசின் லட்சணம்.ஆகவே, அதிமுக- பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும். மத்தியில் பாஜகவை தோற்கடிப்போம், தேசத்தை பாதுகாப்போம். அதிமுகவை தோற்கடிப்போம், தமிழகத்தை பாதுகாப்போம். இதன்ஒருபகுதியாக நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கொமுதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜைஉதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்வோம். இதேபோல், 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நமதுகூட்டணிவேட்பாளர்களை வெற்றிபெறச்செய்யவேண்டும். அத்தகையமகத்தான பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.முன்னதாக, இப்பொதுக்கூட்டத்தில் திமுக நகர செயலாளர் என்.ஆர். சங்கர் வரவேற்புரையாற்றினார். திமுக இளைஞர்அணி மாவட்ட அமைப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, என்.வேலுசாமி, கே.தங்கமணி, எஸ்.தமிழ்மணி, பி. ஜெயமணி, சு.சுரேஷ், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம், என்.ஜோதி, எஸ்.செல்வராஜ், பி.ராமசாமி, தங்கராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் எஸ்.மணிமாறன், காங்கிரஸ் கட்சி மாவட்டதலைவர் ஷேக்நவீத், கொமதேக மாநில துணை பொதுச்செயலாளர் சக்தி நடராஜன், மதிமுக பழனிசாமி, நகரச் செயலாளர் ஜோதிபாசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சபீர், ஆதித்தமிழர் பேரவை மாவட்டசெயலாளர் ஜி.மணிமாறன் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர். முடிவில், சிபிஎம் நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் கே.சின்னசாமி நன்றி கூறினார்.