tamilnadu

காவிரிக்கரை பகுதிகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அபாய எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்படுமா?

ஈரோடு, ஏப். 26-காவிரி கரையோர பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் மற்றும்தடுப்புகள் இல்லாததால் உயிர் இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.காவேரி ஆற்றின் குறுக்கேஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு அதில் தண்ணீர்தேக்கி மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஈரோடுவெண்டிபாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரானது கருங்கல்பாளையம் வரை தேங்கி நிற்கிறது. இதனால் கரையோரத்தில் இருந்த ஏராளமான குடியிருப்புகள் அகற்றப்பட்டு மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளன. எனினும் கரையோரத்தில் படித்துறை பகுதிகளில் தடுப்புகள் இல்லாமலும், அபாயம் குறித்து எச்சரிக்கை பலகைகள் எதுவும் வைக்கப்படாமலும் உள்ளது.

இதனால் சிறுவர்கள் காவேரி ஆற்றில் குளிக்கச் செல்வதும், அப்போது தண்ணீரில் மூழ்குவதும், இதுபோல நடக்கும் விபத்துகளில் சிக்குபவர்களை அருகில் உள்ளவர்கள் காப்பாற்றுவது என்பது வாடிக்கையாக உள்ளது. எனவே எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய விளம்பர பலகைகள் அமைத்து, அபாயமான பகுதிகளில் தடுப்புகள் அமைப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக மட்டும் தண்ணீர்திறக்கப்படுவதால் குறைந்த அளவு தண்ணீர் தான் வருகிறது. இதனால் மதிய நேரங்களில் வெயில் அதிகமாக உள்ளதால் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் குளிப்பதற்காக இங்கு வருகிறார்கள். ஆனால் ஒரு சில நாட்களில்வெண்டிபாளையம் கதவணையில் திடீரென்று தண்ணீர் திறக்கப்படுவதால் வழக்கம்போல் சிறுவர்கள் தண்ணீரில் குளிக்க செல்வதும் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில் மூழ்கி விடுவது போன்ற அபாயங்கள் இருந்து வருகிறது.

காவேரி கரை பகுதிகளில் குறிப்பாக குடியிருப்புகள் உள்ள இடங்களில் தடுப்புகளும் அமைக்கப்படாமல் உள்ளது. பொதுமக்களுக்கு அபாயத்தை விளக்கும் வகையில் எச்சரிக்கை பலகைகள் அதேபோல தடுப்புகள் என எதுவும் கிடையாது. ஆபத்தை உணராமல் தண்ணீரில் குளிக்க செல்வதும் பின்னர் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கி விடுவதும் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.பவானி கூடுதுறை அடுத்துள்ள காவிரிபாலம் பகுதியில் சுழலில் சிக்கி ஏராளமானோர் இறந்த நிலையில், தற்பொழுது தடுப்புகள் அமைக்கப்பட்டு, எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதேபோல் கருங்கல்பாளையம் காவிரி கரை பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளும் தடுப்புகளும் அமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.(ந.நி)