தருமபுரி, ஏப்.20-தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 89.62 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இப்பொதுத் தேர்வை தருமபுரி மாவட்டத்தில், 158 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 20,013 மாணவ, மாணவியர் எழுதினர். இதில், 17,935 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 11,031 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் 89.89 ஆகும். இதேபோல், 50 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 5,899 மாணவ, மாணவியர் தேர்வு எழுதியதில் 5,870 பேர் தேர்ச்சி பெற்றனர். தனியார் பள்ளிகளின் மொத்த தேர்ச்சி சதவிகிதம் 99.51 ஆகும்.
மேலும், 5 சுயநிதி பள்ளிகளைச் சேர்ந்த 677 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இவர்களில் 674 பேர் தேர்ச்சி பெற்றனர். சுயநிதி பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் 99.56. இதேபோல், நான்கு அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தம் 374 மாணவ, மாணவியர் தேர்வு எழுதியதில் 360 பேர் தேர்ச்சி பெற்றனர். இப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் 96.26. மாவட்டத்தில் பொதுத் தேர்வில் வரலாறு மற்றும் வணிகவியல் பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் ஏனைய பாடப் பிரிவுகளைக் காட்டிலும் குறைந்தளவே இருந்தது.குறிப்பாக, வரலாறு பாடத்தில் 661 மாணவர்கள், 740 மாணவியர் என மொத்தம் 1,401 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில்,மாணவர்கள் 529, மாணவியர் 586 என 1,115 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மேலும், வணிகவியல் பாடத்தில் 3,100 மாணவ, மாணவியர் தேர்வு எழுதியதில் 2,473 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். வரலாறு பாடத்தில் மொத்த தேர்ச்சி விகிதம் 79.59 சதவிகிதம் மற்றும் வணிகவியல் பாடத்தில் 79.77 சதவிகிதம். மேலும், தருமபுரி மாவட்டம் கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 92.79 சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருந்தது. நிகழாண்டில் தேர்ச்சி விகிதம் 89.62 சதவிகிதம் பெற்று கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.17 சதவிகிதம் குறைவாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.