tamilnadu

img

வாழ்வுரிமைக்காகப் போராடினால் சிறையில் தள்ளுவதா?

 திருப்பூர், மே 22 -தொழிலாளர்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக அணிதிரண்டு போராடினால் சிறையில் அடைக்கும் அராஜக நடவடிக்கையைக் கண்டித்து திருப்பூரில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஹூண்டாய் கார் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் சோவல் என்ற நிறுவனத்தின் இயந்திரங்களை ஆலையில் இருந்து அகற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆலை இயங்காவிட்டால் தங்கள் வேலை, வாழ்வாதாரம் பறிபோகும் என்று அங்குள்ள தொழிலாளர்கள் சிஐடியு தலைமையில் போராட்டம் நடத்தி வந்தனர்.இந்நிலையில் இயந்திரங்களை எடுத்துச் செல்லவும் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் நீதிமன்ற அனுமதி பெற்றதாகக் காரணம் காட்டி,இப்போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், எஸ்.கண்ணன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது காவல் துறை அடக்குமுறையை ஏவி உள்ளது.மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் மீது நீதிமன்றத்தை அவமதித்ததாக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதேபோல் கண்ணன் உள்ளிட்ட தொழிலாளர்களையும் தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர். தொழிலாளர் வேலைவாய்ப்பு பறிபோவதைத் தடுத்து நிறுத்தாமல், பன்னாட்டு நிறுவனத்திற்கு ஆதரவாக தொழிலாளர்கள் மீதே அடக்குமுறையை ஏவிவிடும் அரசையும், காவல்துறையையும் கண்டித்து சிஐடியு மாநிலந்தழுவிய போராட்டத்தை அறிவித்தது.அதன்படி திருப்பூர் குமரன் சிலை முன்பாக புதன்கிழமை மாலை சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. எனினும் அதை மீறி சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமையில் கோபாவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச்செயலாளர் கே.ரங்கராஜ், சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இப்போராட்டத்தில் சிஐடியு சார்பு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் உள்பட சுமார் 150 பேர் பங்கேற்றனர்.