2019 மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களித்த இளைஞர்கள் ஒரு புதுமையைக் கண்டிருப்பார்கள். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அவர்கள் விரும்பும் சின்னத்திற்கு அருகே உள்ள பொத்தானை அழுத்தியிருப்பார்கள். அவர்கள் விரும்பிய சின்னத்திற்குத் தான் அவர்களின் வாக்கு பதிவானதா என்பதை உறுதி செய்ய அங்கேயே 7 நொடிகள் இருந்தால் போதும். வாக்குப்பதிவான சின்னம் கண்ணாடியால் மூடப்பட்ட திரையில் தெரிந்திருக்கும். பின்னர் அந்தச் சீட்டு தாமாகவே துண்டித்து பெட்டிக்குள் விழுந்திருக்கும். இது விஞ்ஞானத்தின் வளர்ச்சி. ஆனால் 60 ஆண்டுகளுக்கு முன் நாடு சுதந்திரம் அடைந்த பின் 1951-52ல் நடைபெற்ற தேர்தலில் இவர்களின் கொள்ளுத் தாத்தா எப்படி வாக்களித்தார். பெயர்களைத்தேடி சின்னங்களைத் தேடி முத்திரை குத்தி கூட வாக்களிக்கவில்லை. பிறகு எப்படி வாக்களித்தார்? போட்டியிடுகிற ஒவ்வொரு கட்சிக்கும், வேட்பாளருக்கும் தனித்தனியாகப் பெட்டி வைக்கப்பட்டிருக்கும். அதனைத் தேடிக் கண்டுபிடித்து வாக்குச் சீட்டினை அதற்குள் போடவேண்டும். தனித்தனியாக எண்ணப்பட்டு அதிக ஓட்டுகள், சீட்டுகள் யார் பெயரில் இருக்கிறதோ அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். அப்படி என்றால் வாக்குச்சீட்டில், சின்னத்தின் மீது முத்திரையிட்டு ஒரே பெட்டிக்குள் போடும் முறை எப்போது நடைமுறைக்கு வந்தது? 1960-61ல், அதுவும் கேரளா ஒரிசா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில்தான்.1962 மக்களவைத் தேர்தலின்போது தனித்தனி வாக்குப்பெட்டிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு ஒரே தாளில் விருப்பமுள்ள சின்னத்திற்கு முத்திரையிட்டு ஒரே பெட்டியில் செலுத்தும் முறை அறிமுகமானது. இதற்கான வாக்குப்பெட்டிகளை கோத்ரெஜ் அண்ட் போய்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்தப் பெட்டியின் சிறப்பான பூட்டு முறை என்னவென்றால் ஒரு முறை மேற்பகுதி துவாரத்தை மூடி சீல் வைத்து விட்டால் சீலினை உடைத்த பிறகுதான் திறக்க முடியும். வேறு எந்த வகையிலும் திறக்க முடியாது. இந்தப் புது வகையான பூட்டு முறையைக் கண்டறிந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர் மேற்குறிப்பிட்ட நிறுவனத்தின் தொழிலாளர் நாதலால் பஞ்சால் என்பவர்.
பதினைந்து ஆண்டுகள் கழித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைப் பயன்படுத்தலாம் என்ற யோசனையைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதன்படி 1980ஆம் ஆண்டு கேரளா மீண்டும் சோதனைக் களமானது. இம்மாநிலத்தின் பாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இம்முறை சோதித்து பார்க்கப்பட்டது.தேர்தல் விதிகள் இதற்கு இடம் தரவில்லை என்று கூறி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது (1984). 1989 ஆம் ஆண்டு தேர்தல் விதிகளில் திருத்தம் செய்து 1992ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இருப்பினும் 1999 தேர்தல் வரை வாக்குச்சீட்டு முறையே பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் 2004 வரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டன. 2004 மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டன. வாக்குப் பெட்டிகள் மீது சந்தேகம் வராதவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது சந்தேகம் வந்தது. இது புகாராகவும் தேர்தல் ஆணையத்திற்கு தரப்பட்டது. இதிலிருந்து விடுபட வாக்காளர் தாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்த்துக் கொள்ள 'விவிபாட்' எனும் கருவி பொருத்தும் யோசனை முன்வைக்கப்பட்டது. இதற்காக 2013ஆம் ஆண்டு, தேர்தல் விதிகளில் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டது. அத்துடன் நாகாலாந்து நிக்சென் சட்டப்பேரவைத் தொகுதியில் பரீட்சார்த்தமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் இந்தக் கருவிகள் பொருத்தப்பட்டன.
2014ஆம் ஆண்டு பகுதியளவு மக்களவைத் தொகுதிகளில் இவை சோதித்துப் பார்க்கப்பட்டன. இந்த ஆண்டு (2019) நடைபெறும் மக்களவைத் தேர்தல் முழுமைக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களும் "விவிபாட்" களும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை. 216 கட்சிகள் சேர்ந்து தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் 50 விழுக்காடு வாக்குகளின் "விவிபாட்" சீட்டுகளைக் கொண்டு சரிபார்த்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணித் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என்பது அந்தக் கோரிக்கை. ஆனால் தேர்தல் ஆணையம் இந்த நடைமுறையில் முடிவுகளை அறிவித்தால் பெரும் காலதாமதம் ஏற்படும். உரிய காலத்திற்குள் (27 மே, 2019) மக்களவையை அமைக்க இயலாது என்று காரணம் கூறி மறுத்துள்ளது. தனித்தனி ஓட்டுப் பெட்டியிலிருந்து பொத்தானை அழுத்திவிட்டு வந்து விடலாம் என்ற அளவுக்கு முன்னேறி விட்டன தலைமுறைகள். ஆனால் சந்தேகம் மேலும் மேலும் வலுத்துக் கொண்டே போகிறது. என்று முடியும்? எப்படி முடியும்? இந்தப் பிரச்சனை என்று இப்போது வாழும் கொள்ளுத் தாத்தாக்கள் யோசிக்கிறார்கள்! பேரன்களுக்கு அப்படி ஒரு யோசனை இருக்கிறதா? வழி கண்டு பிடிப்பார்களா?