tamilnadu

பிளீச்சிங் தொழிற்சாலையில் தீ விபத்து

ஈரோடு, மே 3-ஈரோடு அருகே பிளீச்சிங் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் விரைந்து அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.ஈரோடு பகுதியில் இருந்து பவானி செல்லும் சாலையில் லட்சுமி திரையரங்கு அருகில் சித்தோடு சின்னக்கவுண்டர் பாளையம் பகுதியை சேர்ந்த கே.எஸ்.பழனிச்சாமி (50) என்பவர் அபிராமி பிளீச்சிங் என்ற பெயரில் ஆலை நடத்தி வந்தார். இந்த ஆலையில் காடா போன்ற துணிகளை பாய்லர் மூலம் வெளுக்கும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளியன்று பாய்லருக்குள் 18 பேர் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பாய்லரின் ஒருபகுதியில் ஆயில் கசிந்து கொண்டிருந்தது. இது ஊழியர்களுக்கு தெரியவில்லை. இந்நிலையில் திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்தது. இதனைப் பார்த்த ஊழியர்கள் பதறியடித்தபடி வெளியே வந்துள்ளனர். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தீயணைப்பு துறை அதிகாரி மயில்ராஜ் தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்ம் எனப்படும் நுரைகளை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து தொடர்பாக கருங்கல்பாளையம் காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொழிற்சாலை வீடுகளுக்கு அருகில் அமைந்திருந்த நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாய்லர் வெடித்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருப்பதோடு, அருகிலிருந்த வீடுகளும் பாதிக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.