tamilnadu

img

கோவை மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்

கோவை மக்களவை தொகுதி வேட்பாளராக வெற்றி பெற்ற சிபிஎம் கட்சியை சேர்ந்த பி.ஆர்.நடராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  திமுக தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக, கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட என்னை 1.82 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வைத்த வாக்காளர்களுக்கு எங்கள் அணியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வேண்டும் என்ற கருத்தோடு, தமிழக மக்கள் மதிப்பளித்து வாக்கினை அளித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் மதச்சார்புடைய அரசுக்கு எதிராகவும், ஜி.எஸ்.டிக்கு எதிராகவும், மதவாத அரசியலுக்கு எதிராகவும் தமிழ் மக்கள் வாக்களித்துள்ளதை பார்க்கிறோம்.

அனைத்து விருப்பங்களையும், தமிழக மக்களின் உத்தரவுகளை முழுமையாக நின்று கடைபிடிப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நேரில் சந்தித்து எதிர்காலத்தில் மாவட்ட வளர்ச்சிப்பணிகளில் அக்கறை செலுத்துவோம். நான் முன்னரே தெரிவித்ததை போல, கோவை மாநகரின் சிறு தொழில்களை பாதுகாக்க ஜாப் ஆர்டருக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்று முதல் முயற்சியை உறுதியோடு மேற்கொள்வோம். தொழிலை பாதுகாப்பதும், தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பையும் பாதுகாப்போம் என்பதை முதல் வேலையாக எடுத்துக் கொள்வோம். கடுமையான வறட்சி காலத்தில் நதியை பற்றி அதிகம் பேச வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நொய்யல் ஆறு, கவுசிகா நதி உள்ளிட்ட மாவட்டத்தின் நீராதாரங்களை பாதுகாக்க தேவையான முயற்சியை அனைத்து அமைப்புகளோடும் இணைந்து மேற்கொள்வேன். நாட்டில்  மதச்சார்புடைய அரசை மீண்டும் மக்கள் தேர்வு செய்ததை நாங்கள் வருத்தத்தோடு பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.