கோவை, ஏப்.14-நடைபெறும் தேர்தல் மோடி- எடப்பாடி ஆட்சிக்கு முடிவு கட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்தேசிய செயலாளர் டி ராஜா கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து பாப்பநாயக்கன் புதூர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், ஜனநாயகம் இருக்குமா? அழிந்து போகுமா என்ற அச்சம் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சமயத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. பாஜக அரசியல் கட்சி என்றாலும், அதனை ஆட்டுவிப்பது ஆர்.எஸ்.எஸ் ஆகும்.ஆர்.எஸ்.எஸ் மதசார்பற்ற ஜனநாயகத்தையும், அனைவரும் அனைத்தும் பெற்று மகிழ்ச்சியாக இருப்பதையும் எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. தற்போதைய பாஜகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா மாறியுள்ளது. இதேபோல், பிரதமர் குறித்து கேள்வி கேட்டால் அவர்களை தேசவிரோதிகள், நக்சலைட்டுகள், அர்பன்நக்சலைட்டுகள் என்று சொல்கின்றனர். பாதுகாப்பு துறை அமைச்சர், வெளியுறவு துறை அமைச்சர் என யாருமில்லாமல் பிரதமர் மோடி அவர்கள்ரபேல் பேரத்தினை நேரடியாகவே நடத்தி முடித்துள்ளார். பாஜக ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கோவை, திருப்பூர் உட்பட நாடு முழுவதும் சிறு குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் கார்ப்பரேட் முதலாளிகளின் கையாளாக மத்திய அரசு செயல்பட்டு வந்துள்ளது. இதேபோல், தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்தநீட் தேர்வு, ஸ்டெர்லைட், மீத்தேன் போன்ற திட்டங்கள் தற்போது எடப்பாடியின் ஆட்சியில் செயல்படுத்தப்படுகின்றது. அதிகாரத்தை தக்கவைக்க மோடியின் காலில் விழுந்து கிடக்கும் எடுபிடி அரசாகதமிழக அரசுதிகழ்கின்றது. ஆகவே,நடைபெறும் இடைதேர்தல்களில் அதிமுக அடையும் தோல்வி எடப்பாடிஅரசின் ஆட்சிக்குமுடிவு கட்டும். இதேபோல், பாஜகவின் ஆட்சிக்கும்முடிவு கட்டும் வகையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில்கோவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.முன்னதாக, இந்தப் பொதுக்கூட்டத்திற்கு சிபிஐ மேற்கு மண்டல செயலாளர் ஜெயா தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், திமுக மாவட்ட மாநகர மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், திமுக மாநகர மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குப்புசாமி, வா.மா.சண்முகசுந்தரம், மதிமுக வடக்கு தொகுதி துணைத் தலைவர் கிருஷ்ணசாமி, காங்கிரஸ் கட்சியின் கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு நகர செயலாளர் என்.ஆர்.முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.