கோவை, மே 14-கோவை அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்படுத்த அமைக்கப்பட்ட நுழைவு வாயில் தற்போது மருத்துவமனை முதல்வருக்கு மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நல மருத்துவம், இதயவியல் துறை, முடநீக்கியல் துறை உள்பட சுமார் 33 துறைகள் உள்ளன. மருத்துவமனை வளாகத்தில் கடந்த 2016ல் ரூ.62 கோடி மதிப்பில் தரைத்தளத்துடன் கூடிய4 மாடி கட்டிடம் கட்டப்பட்டது. இதன் தரைத்தளத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சை பிரிவு,பல் மருத்துவம், நவீன ஸ்கேன் பிரிவுகள் செயல்படுகிறது. முதல் தளத்தில் முடநீக்கியல் துறை, முழு உடல் பரிசோதனை துறைகளும், 2வது தளத்தில் நரம்பியல் துறை, 3வது தளத்தில் சிறுநீரகம், மார்பக அறுவை சிகிச்சை, நவீன சிறுநீரகவியல் ஆய்வகம், 4வது தளத்தில் நவீனஅறுவை சிகிச்சை அரங்குகளும், ஊழியர்களுக்கான குடியிருப்புகளும் அமைந்துள்ளன. இந்நிலையில், இந்த புதிய கட்டிடத்தில் தீவிரசிகிச்சைப் பிரிவு அமைந்துள்ள கட்டிட பகுதியில் உள்ள நுழைவு வாயில் எப்போதும் மூடிய நிலையிலேயே உள்ளது. நோயாளிகளை கொண்டு செல்ல அமைக்கப்பட்ட சாய்வுதளம் வழியாக தான் நோயாளிகள், உறவினர்கள், மருத்துவர்கள் என அனைவரும்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பிரதான நுழைவு வாயில் பொதுமக்களுக்குத் திறக்கப்படாமல், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ரவுண்ட்ஸ் வரும் போதும், மீட்டிங் செல்லும் போது மட்டுமே திறக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் மூடப்படும். இது முதல்வர் வழி, நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இவ்வழியில் அனுமதியில்லை எனகாவல் பணியில் உள்ள ஊழியர்கள் பொதுமக்களுக்கு தடைவிதிக்கின்றனர். இது நோயாளிகள்,பொதுமக்கள் மத்தியில்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் மட்டும் செல்ல எதற்கு இவ்வளவு செலவில் ஒரு நுழைவு வாயில் என மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.