tamilnadu

img

மோடிக்கு தண்டனை நோட்டாவுக்கு வாக்களிப்பதல்ல, நேர்மையான அரசியலுக்கு போராடுபவர்களுக்கு வாக்களிப்பதே கோவை சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பேச்சு

கோவை, ஏப்.12- மோடிக்கு தண்டனை நோட்டாவுக்கு வாக்களிப்பதல்ல, நேர்மையான அரசியலுக்கு போராடுபவர்களுக்கு வாக்களிப்பதே என கோவை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், இளம் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். இவர் வெள்ளியன்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். கோவை காளப்பட்டி மாரியம்மன் கோவில் முன்பிருந்து துவங்கிய வாக்கு சேகரிப்பு பயணத்தை திமுக பகுதி கழக பொறுப்பாளர் பையாக்கவுண்டர் துவக்கி வைத்து உரையாற்றினார். இதனையடுத்து வாக்கு சேகரிப்பு பிரச்சார இயக்கம் வீரியம்பாளையம், கிழக்கு தொட்டிபாளையம், ஆர்.ஜி.புதூர், அத்திக்குட்டை, நேருநகர், விளாங்குறிச்சி, பண்ணாரியம்மன் நகர், சின்ன மேட்டுப்பாளையம், சரவணம்பட்டி, விநாயகா நகர், சிவானந்தபுரம், சின்னவேடம்பட்டி, உடையாம்பாளையம், கே.கே.நகர் உள்ளிட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு நஞ்சேகவுண்டன் புதூரில் ஒருபகுதி பிரச்சாரம் நிறைவடைந்தது.


இந்த பிரச்சார இயக்கத்தில் திமுக நிர்வாகிகள் ரகுபதி, ரத்தினவேல், பொன்னுசாமி, சிறவை கோபாலகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆர்.என்.லோகநாதன், ரகுராமன், குணசேகரன், நவீன், குமார், கோபால், மதிமுக நிர்வாகிகள் விஸ்வராஜ், சின்னையன், பாலகுருசாமி, சிபிஐ சிவசாமி, சௌந்திரராஜ், மூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் ரமேஷ், பாலசுப்பிரமணியம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முத்துவளவன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, என்.அமிர்தம் மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி.கருணாகரன், கே.எஸ்.கனகராஜ், கோபால் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனத்தில் அணிவகுக்க வாக்கு சேகரிப்பு பிரச்சார இயக்கத்தில் பங்கேற்றனர்முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பிரச்சாரத்தில் பேசுகையில், இப்போது நான் காளப்பட்டி மாரியம்மன் கோவில் முன்பு இருந்து இந்த பிரச்சாரத்தை துவக்குகிறேன். நான் மசூதிக்கும், சர்ச்சுக்கும் என அனைத்து வழிபாட்டு தளங்களுக்கும் சென்று பிரச்சாரத்தை மேற்கொள்கிறேன். அனைத்து மதங்களுக்கும் இங்கு இடமுண்டு, அனைவரும் சமம், அவரவர் வழிபாட்டு உரிமையை யாரும் தடுக்கக்கூடாது. இத்தகைய அமைதி இருந்தால்தான் வளர்ச்சி சாத்தியமாகும்.


அதனைத்தான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலியுறுத்துகிறது. நமது மாவட்டத்தின் வளர்ச்சியையும் அமைதியையும் பாதுகாக்க வேட்பாளராக உங்கள் முன்பு நிறுத்தப்பட்டுள்ளேன்.மேலும், நமது கோவை மாவட்டம் வந்தோரை வாழவைக்கிற மாவட்டம். எங்கிருந்து யார் வந்தாலும் உழைத்து பிழைப்பதற்கு வாய்ப்பை உருவாக்கித் தருகிற மாவட்டம். ஆனால், இப்போது நம் ஊருக்காரர்களுக்கே வேலை இல்லை என்கிற நிலை மோடியின் ஐந்தாண்டு ஆட்சியில் உருவாகியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சிறுகுறு தொழிலில் ஜாப் ஆர்டர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவை கடுமையான தொழில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, ஜாப் ஆர்டர்களுக்கு ஜிஎஸ்டி அறவே கூடாது. சிறுகுறுந்தொழில் கூடங்களில் உற்பத்தி செய்யப்பட்டு முழுமையடைந்த பொருட்களுக்கு குறைந்தபட்ச ஜிஎஸ்டி விதிக்க நிர்பந்திப்போம் என்கிற வாக்குறுதியை நாங்கள் முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். நான் கிராமப்புற பகுதிகளில் பிரச்சாரத்திற்கு சென்றபோது அங்குள்ள இளைஞர்கள் என்னிடம் பேசுகையில், நகரத்திற்கு சென்று ஒர்க்சாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.


மோடி ஆட்சியில் வேலை இழந்து இப்போது கிராமத்திலேயே முடங்கிக்கிடக்கிறேன். தொழில் பிழைக்குமா, பிழைக்காதா என்கிற நிலையில் உங்களது கோரிக்கைதான் எங்களுக்கு நம்பிக்கையை வரவழைக்கிறது என்று கையை இறுகப்பற்றி கூறினர். வந்தவர்களையெல்லாம் வாழவைத்த நமது ஊர், இப்போது சொந்த ஊருக்காரனுக்கே வேலை இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை மாறவேண்டும் மோடி அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதேநேரத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மோடியை தூக்கிப்பிடித்த சில இளைஞர்கள் மோடியின் ஐந்தாண்டு ஆட்சியில் வெறுப்புற்று தங்களின் வாக்கை நோட்டாவுக்கு போடுவதாக சொல்கிறார்கள். நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்க வேண்டும். தவறாக ஆட்சியை நடத்திய மோடிக்கு தண்டனை நோட்டாவுக்கு வாக்களிப்பதல்ல, மாறாக நேர்மையான அரசியலுக்கு போராடுபவர்கள், போட்டியிடுகிற வேட்பாளர்களின் கடந்த கால செயல்பாடுகளை தீர விசாரித்து வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.