கோவை, மே 30–வீட்டுமனையை பிரித்து அங்கீகாரம் பெறுவதற்கு ரூ.2.5 லட்சம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி தெற்கு மண்டல நகரமைப்பு அலுவலர் உட்பட இருவரை லஞ்ச ஒழிப்புதுறையினர் புதனன்று நள்ளிரவில் கைது செய்தனர். கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் தனக்குச் சொந்தமன 4.7 ஏக்கர் நிலத்தை வீட்டுமனையாகப் பிரித்து விற்பனை செய்வதற்கு மாநகராட்சியில் அங்கீகாரம் பெற விண்ணப்பித்துள்ளார். அப்போது கோவை மாநகராட்சி தெற்கு மண்டல நகரமைப்பு உதவி அலுவலர் சரவணன் ரூ.5 லட்சம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். முதல்கட்டமாக ரூ.2.5 லட்சம் தருமாறு வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து சோமசுந்தரம் டிபி சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் வந்து பணத்தைப் பெற்று கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், லஞ்ச ஒழிப்புத் துறையினரின் திட்டப்படி ரசாயனம் தடவிய ரூ.2.5 லட்சம் பணத்துடன் சோமசுந்தரம் அலுவலகத்தில் காத்திருந்தார். அப்போது சரவணனின் உதவியாளர் ஆனந்தகுமார் வந்து பணத்தை பெற்ற போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர். விசாரணையில் நகரமைப்பு அலுவலர் சரவணன் பணத்தை வாங்க சொன்னதாக அனந்தகுமார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்து வியாழனன்று காலை கோவை ஒருங்கினைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஸ்தோத்திரமேரி உத்தரவிட்டார்.