ஈரோடு, ஏப்.10-ஈரோடு. நேதாஜி தினசரி மார்க்கெட்டில் ஆளும் அதிமுகவினர் ரூ.20 கோடி வரை வியாபாரிகளிடமிருந்து கையாடல் செய்துள்ளதாக புகார் எழுத்துள்ளது.ஈரோடு, நேதாஜி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் கடந்த 1969ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த சங்கத்தில் ஆரம்ப காலத்தில் 62 பேர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். சந்தாவாக ஒரு ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்பட்டது. தற்போது சந்தை அதிக அளவில் வளர்ச்சி அடைந்து 80க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். சந்தாவாக ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில், அதிமுகவின் மாவட்ட நிர்வாகிகளான பி.பி.கே.பழனிசாமி சங்கத்தின் தலைவராகவும், வைரவேல் பொருளாளர் என 5 பேர் நிர்வாகபொறுப்பாளர்களாக உள்ளனர். இவர்கள், உறுப்பினர்களுக்கு இடம் வாங்கி தருவதாக கூறி நபர் ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் விதம் வசூல் செய்துள்ளனர். பணம் வசூல்செய்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் இடம் ஒதுக்கி தரப்படவில்லை. சங்கத்தின் சந்தா கணக்கு, மார்க்கெட் குத்தகை கணக்கு, மாத வட்டி, மார்க்கெட் தராசு கணக்கு, மாரியம்மன் பண்டிகை நன்கொடை கணக்கு என அனைத்திற்கும் உரியஆவணங்களுடன் கணக்கு காட்டப்படவில்லை. அதே, போல சங்கத்தின் சார்பில் வாங்கிய 21 ஏக்கர் நிலத்தை 9 நபர்கள் கிரயம் செய்வதாக கூறி, 5 நிர்வாக பொறுப்பாளர்கள் மனைவிகளின் பெயரில் கிரயம் செய்துள்ளனர். இது குறித்து கேட்டவியாபாரிகளுக்கு இதுவரை பதிலளிக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த வியாபாரிகள் கணக்குகளை முறையாக ஒப்படைக்க வேண்டும். வாங்கிய பணத்திற்கு இடத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேதாஜி தினசரி மார்க்கெட் பகுதியில் விளக்கம் கேட்டு கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் யாரும் வரவில்லை.இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து மூன்று நாட்கள் ஆகி விட்டது. காலை 8 மணியளவில் வியாபாரிகள் அனைவரும் வந்தோம். ஆனால், மதியம் 12 மணிவரை நிர்வாக பொறுப்பாளர்கள் யாரும் வர வில்லை. மார்க்கெட் பகுதியில் மட்டுமே சுமார் ரூ.20 கோடி வரை பணத்தை வசூல் செய்து கையாடல் செய்துள்ளனர். இது குறித்து சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.