மங்கலம் ஊராட்சி கிராமசபை
திருப்பூர், அக். 2 – திருப்பூர் ஒன்றியம் மங்கலம் ஊராட்சியில் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கட்சி, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களிடம் சேகரித்த 1092 மனுக்களை அதிகாரிகளிடம் ஒப்படைத் தனர். முன்னதாக கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் மேற்படி அரசியல் கட்சிகளின் ஊராட்சி நிர்வாகிகள் மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களைப் பெற்றனர். இதில் இலவச வீட்டுமனைப் பட்டா கோரி 896, குடிநீர் இணைப்பு கோரி 151, முதியோர் உதவித் தொகை கோரி 28, வீட்டு வரி ரசீது கோரி 29 மற்றும் ரேசன் கார்டு கோரி 8 மனுக்கள் என மொத்தம் 1092 மனுக்கள் பெறப்பட்டன. புதன்கிழமை சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மங்கலம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ், முஸ்லிம் லீக், மமக, கொமக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் ஜெயக்குமார் மற்றும் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்று கிராம சபையை நடத்தினர். அதிகாரிகளிடம் இந்த கோரிக்கை மனுக்களை அரசியல் கட்சி நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.