tamilnadu

img

கோபி அருகே மலைவாழ் மக்களுக்கு 100 நாள் வேலை

கோபி, ஜூலை 25- கோபி அருகே உள்ள விளாங்கோம்பை மலைவாழ் மக்களுக்கு முதன் முறையாக தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இத னால் மலைவாழ் மக்கள் பெரும் மகிழ்ச்சிடைந்துள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மலைவாழ் மக்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை வைத்தன. இந்நிலையில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள விளாங்கோம்பை மலைவாழ் மக்கள் கிராமத்தில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் முதல் முறையாகப் பணி வழங்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வரும் விளாங்கோம்பை மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்காகக் கால்நடை வளர்ப்பு மற்றும் வனப்பகுதியில் சேகரிக்கப்படும் தர்பை புல் ஆகியவற்றை விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குப் போதுமான வருவாய் இல்லாததினால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவோ, மேல் படிப்பிற்கு அனுப்பவோ இய லாத சூழ்நிலையில், கால்நடை மேய்க்கவும், குழந்தைத் தொழிலாளர்களாகப் பணியில் அமர்த்தும் செயலிலும், குழந்தைத் திருமணங்கள் செய்து வைக்கும் அவலமும் இருந்து வருகிறது. அதனால் அவர்களது வாழ்வாதாரத் தையும், வருவாயையும் மேம்படுத்த மலைவாழ் மக்கள் சங்கத்தினர்கள் போராடி வருகின்றனர்.  அதன் ஒருபகுதியாக தற்போது முதல் முறையாக தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மலைப்பகுதியிலிருந்து வழிந்தோடும் மழைநீரை தடுப்பு கள் அமைத்து சேகரிக்கும் பணியை வட்டார வளர்ச்சி துறை அளித்தது. இப்பணியில் விளாங்கோம்பை மலை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் 100க்கும் மேற்பட் டோர் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுள்ளனர்.  இதுபோல் அனைத்துப் பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களுக்கும் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.