எதிர்க்கட்சியினர் எதைச்செய்தா லும் வழக்குப் பதிவு செய்கிற தேர்தல் ஆணையம், ஆளும் கட்சிகளின் விதி மீறல்களை கண்டுகொள்ள மறுக்கிறது; மத்திய அரசின் ஒரு பிரிவு போல நடந்து கொள்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி பெரியநாயக்கன் பாளையம் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மேலும் எஸ்.எஸ்.குளம் பகுதி செயல்வீரர்கள் கூட்டம் கோவில்பாளையத்தில் நடைபெற்றது. இக்கூட்டங்களில் பங்கேற்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் உரையாற்றினார். முன்னதாக கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சி சார்பு நிலையில் செயல்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்கு பணம் கொடுத்து
ஆட்களை லாரிகளில் அழைத்து செல்கின்றனர். தேர்தல் விதிமுறைகளை மீறும் அதிமுக, பாஜகவினர் மீது தேர்தல்ஆணையம் வழக்கு பதிவு செய்வ தில்லை. ஆனால் எதிர்க்கட்சியினர் எதனை செய்தாலும் வழக்குப் பதிவு செய்கிறது. தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடக்க வேண்டும். தேர்தல் ஆணையம் 3 தொகுதி இடைத்தேர்தல் நடத்த முடியாததற்கு என்ன காரணம்? தேர்தல் ஆணையம் மத்திய மோடி அரசின் ஒரு பிரிவு போல செயல்படக் கூடாது” என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:பொள்ளாச்சி பாலியல் வழக்கை மூடி மறைக்க அரசு முயல்கிறது. உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற முடியாது. இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு 20 நாட்களுக்கு மேலாகியும், விசாரணை துவங்கவில்லை. எதற்காக சிபிஐக்கு மாற்றினார்கள் என்கிற கேள்வி எழுகிறது. 5 ஆண்டுகளில் விலைவாசி உயரவில்லை என பாஜகவினர் கூறுகிறார்கள். இவர்கள் கடைத்தெருவுக்குச் சென்று காசு கொடுத்து பொருட்களை வாங்கியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. பெட்ரோல் விலை, எரிவாயு சிலிண்டர் விலை என இந்த ஆட்சியில் விலை ஏறாத ஒரு பொருளும் இல்லை. மோடி ஆட்சிக்கு முடிவுகட்டும் ஒரே குறிக்கோளோடு திமுக கூட்டணி செயல்படுகிறது. 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுமென சொல்லும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஏன் இரண்டு ஆண்டு களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை? தேர்தல் நடத்தி அனைத்திலும் வெற்றிபெற வேண்டியதுதானே? தேர்தல் என்ற வார்த்தையை கேட்டாலே, அதிமுக அலறி அடித்து ஓடுகிறது.தேர்தலை நினைத்தால் அதிமுக வினருக்கு இரவில் தூக்கம் வருவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.