1954 - உலகின் முதல் சிலிக்கன் சூரிய மின்கலத்தை (சோலார் செல்) கண்டு பிடித்திருப்பதாக பெல் தொலைபேசி ஆய்வகம் அறிவித்தது. கால்வின் ஃபுல்லர், டேரில் சாப்பின், ஜெரால்ட் பியர்சன் ஆகியோர் இதனை உருவாக்கினர். ஒயர்கள் பொருத்தப்பட்ட கால் ரூபாய் நாணயம் போன்ற ஒன்றை ஃபுல்லர் வீட்டுக்கு எடுத்து வந்ததாகவும், சிறிய காற்றாலை(பொம்மை) ஒன்றில் அதை இணைத்து, அதன்மீது ஒளியைப் பாய்ச்சியதும் காற்றாலை சுற்றியதாகவும், அவர் மகன் கூறியுள்ளார். சூரிய ஒளிக்கும் மின்சாரத்திற்குமான தொடர்பு, எட்மண்ட் பெக்குரல் என்ற பிரெஞ்சு இயற்பியலாளரால் 1839இல் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. மின்முனைகளின்மீது ஒளிபடும்போது சிறிய அளவில் மின்சாரம் உருவாவதைக் கவனித்த இவர், தன் 19 வயதில், தந்தையின் ஆய்வகத்தில் உலகின் முதல் சூரிய மின்கலத்தை உருவாக்கினார். இதனால் இந்த ஒளிமின்னழுத்த (ஃபோட்டோ வோல்ட்டாயிக்) விளைவு, பெக்குரல் விளைவு என்றே அழைக்கப்படுகிறது. 1883இல் சார்லஸ் ஃப்ரிட்ஸ், செலனியத்தைப் பயன்படுத்தி முதல் திட நிலை சூரிய மின்கலத்தை உருவாக்கினாலும், அதன் திறன் வெறும் 1 சதவீதம் அளவுக்குத்தான் இருந்தது. 1887இல் ஹீன்ரிச் ஹெர்ட்ஸ், ஒளிமின் விளைவைக் கண்டுபிடித்தார். இதைப் பயன்படுத்திய முதல் சூரியஒளி மின்கலத்தை, 1888இல் அலெக்சாண்டர் ஸ்டோலெட்டோவ் உருவாக்கினார். 1905இல் புதிய குவாண்டம் கொள்கையை உருவாக்கிய ஐன்ஸ்டீன், அதனடிப்படையில் ஒளிமின் விளைவை விளக்கியிருந்தார். இந்தக் கொள்கைக்காக அவருக்கு 1921இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1941இல் வாடிம் லஷ்கர்யோவ், 1946இல் ரஸ்ஸல் ஆல் ஆகியோரின் கண்டுபிடிப்புகளும் சூரிய மின்கலத்துக்கு வழிகோலின. சிலிக்கன் சூரியஒளி மின்கலம், அமெரிக்காவின் வேன்கார்ட்-1 செயற்கைக்கோளுக்கு மின்சக்தியளிக்கப் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் சூரிய மின்சக்தி பரவலாக அறியப்பட்டது. ஒரு வாட் மின்சாரம் உற்பத்திசெய்ய 1970இல் (தற்போதைய மதிப்பில்) ரூ.6800 செலவானதிலிருந்து, தற்போது ரூ.48 என்ற அளவுக்கு சூரியமின்கலங்களின் விலை குறைந்ததால் பயன்பாடு மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்துள்ளது.
அறிவுக்கடல்