பெய்ஜிங்,
சீனா தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வாயு கசிவினால் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உலோக தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் பலியாகினர். 5 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உடைந்த உலோகங்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்த பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் வெடிவிபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது கடந்த 10 நாட்களில் ஜியாங்சுவில் ஏற்பட்டுள்ள 2வது மிக பெரிய வெடிவிபத்து ஆகும். கடந்த மார்ச் 21ந்தேதி யான்செங் நகரில் உள்ள ரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 78 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.