சென்னை:
பெப்சி நிறுவனம் இந்திய விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி சென்னையில் திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
பெப்சி நிறுவனம் லேஸ் தயாரிப்பதற்கென்று காப்புரிமை பெற்றுள்ள உருளைக்கிழங்கை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இது சட்டவிரோதம். எனவே, ஒவ்வொரு விவசாயியும் ஒரு கோடியே ஐந்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டுமென்று ஒன்பது விவசாயிகள் மீது அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. பன்னாட்டு கம்பெனியான பெப்சியின் இந்த அடாவடித்தனமான விவசாயிகளை அச்சுறுத்தும் நடவடிக்கைக்கு எங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மன்னிப்புக்கேட்க வேண்டும்
இந்திய விவசாயத்தில் அந்நிய கம்பெனிகளை அனுமதித்தால் நமது நாட்டு விவசாயிகள் நடுத்தெருவில் நிறுத்தப்படுவார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும். இந்திய விவசாயிகளின் மீதான இந்த கொடூரமான நடவடிக்கை குறித்து மத்திய அரசுமௌனம் சாதித்து வருவது வன்மையாகக்கண்டிக்கத்தக்கது ஆகும். இது மத்திய அரசின் பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவான போக்கையே வெளிப்படுத்துகிறது. இந்திய விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்துள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெறுவதுடன், விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். அதுவரை, பெப்சிதயாரிக்கும் லேஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் புறக்கணிக்க முன்வருமாறு தமிழக மக்களை வேண்டிக்கேட்டுக் கொள்கிறோம்.
கண்டன ஆர்ப்பாட்டம்
விவசாயிகளின் பயிரிடும் உரிமையைப் பாதுகாக்கவும், பன்னாட்டு கம்பெனிக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்துமாறு அறைகூவல் விடுக்கிறோம். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னையில் மூன்று அமைப்புகளின் சார்பில் கூட்டாக கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெறவுள்ளது.விவசாயிகளுக்கு நமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் அனைத்துப் பகுதி மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆதரவை வெளிப்படுத்துமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். மேற்கண்ட அறிக்கையில் பெ.சண்முகம், எஸ்.பாலா, எஸ்.மாரியப்பன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.