திருநர் உரிமை பாதுகாப்பு திருத்த மசோதாவை திரும்ப பெறுக! வாலிபர், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை, மார்ச் 19 - திருநர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா-2026ஐ திரும்ப பெற வலியுறுத்தி புதனன்று (மார்ச் 18) சிந்தாதிரிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இந்திய மாணவர் சங்கமும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின. இந்தப்போராட்டத்தில் பேசிய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.மிருதுளா, “நால்சா தீர்ப்பு வழங்கிய சுய அடையாள உரிமையை இந்த மசோதா பறிக்கிறது. ஒருவருடைய பாலினத்தை மருத்துவ அதிகாரிதான் தீர்மானிப்பார் என்பது அநீதியானது. திருநர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து மசோதாவில் இல்லை. இந்தச் சட்டத் திருத்தத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் போன்று பிற அரசியல் கட்சிகளும், முற்போக்கு ஜனநாயக சக்திகளும் எதிர்க்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் தௌ.சம்சீர் அகமது குறிப்பிடுகையில், “பெண்கள், திருநர்களுக்கு எதிராக பேசி வரும் டிரம்பின் நிலைப்பாட்டையே பிரதமர் மோடியும் இந்த மசோதா மூலம் முன்மொழிகிறார். வீட்டை விட்டு வெளி யேறும் குழந்தைகளுக்கு அடைக்கலம் தருவோரை குழந்தை கடத்தல் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதும் திருநர்களுக்கான பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகிறது என்றார். வாலிபர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் வே.அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளர் தீ.சந்துரு, மாவட்டச் செயலாளர்கள் ஜா.பார்த்திபன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கு.தமிழ், சமூக செயற்பாட்டாளர்கள் அக்னி, சுதா, சாஷா உள்ளிட்டோர் பேசினர்.
