சென்னை:
சிபிஎம் பொதுச்செயலாளர் யெச்சூரி மற்றும் பேராசிரியர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் மீதான பொய் வழக்கை தில்லி காவல்துறை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் செப்டம்பர் 16 புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற வகுப்புவாத கலவரத்தை ஒட்டி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கீழ் இயங்கி வரும் தில்லி காவல்துறை அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், கலாச்சார பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது பொய் வழக்குதொடுத்துள்ளது.நீதிமன்றத்தில் தில்லி காவல்துறை தாக்கல் செய்துள்ள துணைக் குற்றப்பத்திரிகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டுஅறிவுசார் துறையினர் சேர்க்கப்பட்டுள்ள னர். இதனைக் கண்டித்தும், பொய் வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக் கோரியும் செப்டம்பர் 16புதனன்று தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வடசென்னை மாவட்டம் சார்பில் தங்கசாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
சிறுபான்மை மக்களுக்கு எதிரான சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய சட்டங்களை திரும்பப்பெறக் கோரி அறவழியில் போராடிய மக்கள் மீது, இந்துத்துவா ஆர்எஸ்எஸ், பாஜக கும்பல் காவல்துறையின் துணையோடு வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்த சீத்தாராம் யெச்சூரி, பேராசிரியர் ஜெயதிகோஷ், யோகேந்திர யாதவ் போன்றோர் மீது கலவரத்தை தூண்டியதாக பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.ஊரடங்கு காலத்தில் ஆனந்த்டெ ல்டும்டே போன்ற கல்வியாளர்களை சிறையில் அடைத்துள்ளனர். பொய் வழக்குகளால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பணிய வைக்கலாம் என பிரதமர் மோடி நினைத்தால் அது பகல் கனவாகத்தான் முடியும்.நாடு முழுவதும் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி-யில் இருந்து மாநில அரசுகளுக்கு பங்கு தராமல் மத்திய அரசுமோசடி செய்கிறது. கொரோனா நிவாரணப்பணிகளுக்கு போதிய நிதியை தராமல் மோடி தமிழக மக்களை வஞ்சித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம் மோசமானநிலைக்கு சென்றதற்கு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம். இவர்களின் தவறுகளை எதிர்த்தால் தேசதுரோக வழக்கை சுமத்தி கைது செய்கின்றனர். யெச்சூரி மீதான பொய் வழக்கை மோடி அரசு திரும்பப்பெற வேண்டும்.நீட் தேர்வை யார் கொண்டு வந்தார்கள் என்று ஆய்வு செய்வதை விட அதனை உடனே ரத்து செய்ய வேண்டும்.நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மறுக்கும் நிலையில் ஏன் மாநில அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை? அதிமுக அரசு உச்சநீதிமன்றத்திற்கு ஏன் செல்லவில்லை? நீட் விவகாரத்தில் அதிமுக அரசு நாடகம் நடத்துகிறது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவுசெய்திருப்பதாக மாநில அரசு கூறுகிறது.இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமா?இவ்வாறு அவர் பேசினார்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்டச்செயலாளர் எல்.சுந்தரராஜன் உள்ளிட்டோர் பேசினர்.
தென்சென்னை மாவட்டம் சார்பில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், ஆர்.வேல்முருகன், எஸ்.நம்புராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மத்தியசென்னை மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் பேசினர்.