tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

கடலூர், ஏப்.3- கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், வியாழனன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கடலூர், கடலூர் முதுநகர், சுத்துகுளம், பச்சையாங்குப்பம், சேடப்பாளையம், காரைக்காடு, குடிகாடு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல் பண்ருட்டி, நெய்வேலி பகுதியில் லேசான சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. கோடை வெயில் அடித்த நிலையில், குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்திற்கு  வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி, ஏப்.3- புதுச்சேரி வழுதாவூர் சாலை பேட்டையன் சத்திரத்தில் ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.  ஆட்சியராக உள்ள குலோத்துங்கன்  அதிகாரப்பூர்வ  இ மெயிலில்,  ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வியாழக்கிழமை (ஏப். 3) மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் உடனே இதுகுறித்து தன்வந்திரி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து  வெடிகுண்டு நிபுணர்களுடன் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.  உடனே ஊழியர்களை வெளியேற்றப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் வெடிகுண்டு புகார் புரளி என்பது தெரிய வந்தது.

சுகாதாரத்துறை ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

தேசிய சுகாதாரத்துறை ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. புதுச்சேரி சுகாதாரத் துறையில் என்.எச்.எம் ஊழியர்கள் 700 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். சமவேலைக்கு சம ஊதியம், குறைந்த ஊதியத்தில் ஆண்டுக்கணக்கில் பணி யாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முதல்வர் உறுதியை மீறி புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் என்.எச்.எம் ஊழியர்களுக்கு ரூ.15,000 ரு.12000,ரு.10000 என மூன்று விதமான ஊதிய உயர்வு உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஊழியர்கள் வைத்த கோரிக்கைகளை பரிசீலனை செய்யாமல் முதல்வர் அறிவித்த ஊதிய உயர்வு அறிவிப்பு ஏற்காமல் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.  ஊழியர் சங்க தலைவர்களை அழைத்து பேசி என்.எச்.எம் ஊழியர்களை பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை க்கு ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சுற்றுச் சுவரில் மோதிய  அரசு பேருந்து

சிதம்பரம், ஏப் 3- சேத்தியாத்தோப்பு அருகே பாலத்தை விட்டு வெளியேறி சுற்றுச்சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கியது அரசு விரைவு சொகுசு பேருந்து. கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரகுடி கிராமத்தில்  வீராணம் ஏரியின் வடிகால் வாய்க்கால் வளைவில் 100 ஆண்டுகளை கடந்த பழமையான பாலம் உள்ளது.  இந்த பாலத்தின் வழியாக சென்னை-கும்பகோணம்  தேசிய  நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் வியாழ னன்று சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி தமிழக அரசின் விரைவு சொகுசு பேருந்து  20 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. சேத்தியாதோப்பு அடுத்த குமார குடி பாலத்தின் அருகே வரும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்கு வெளியே சுற்றுச்சுவரில் மோதி வாய்க்காலின்  முகப்பில் தொங்கியவாறு பேருந்து நின்றது. அதில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கினர். இறங்கிய பயணிகளை மாற்று அரசு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பாலத்தில் தொடர்ந்து விபத்து நடைபெறுவதால், பெரிய அளவில்  புதிய பாலம் அமைக்க வேண்டும் என  வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.