சென்னை,ஜூலை 2- தமிழக சட்டப்பேரவையில் ஜூலை 2 அன்று கேள்வி நேரத்திற்கு பிறகு, முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதால் ஏற்படும் பிரச்சனை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- நீட் தேர்வு தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி மாநில உரிமைகளை கொஞ்சம்கூட மதிக்காமல் சட்ட நடைமுறைகளுக்கு புறம்பாக வலுக்கட்டாயமாக மத்திய அரசு திணித்துள்ளது. இதனால் பல மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். மாணவிகளின் பெற்றோர் மன அழுத்தத்தால் தவிக்கின்றனர். தேவையின் அடிப்படையில்தான் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைகள் நடைபெறுகிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று 1.2.2017 அன்று சட்டப்பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். ஆனால் இதுவரை ஒப்புதல் கிடைக்க வில்லை. அந்த கோப்புகள் மத்திய அரசு அலமாரியில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கின்றது. தமிழக மாணவர்களின் எதிர்கால நலனுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் இந்த கொள்கையினால், சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வின் தர வரிசை பட்டியல் இதுவரை வெளியிடப் படவில்லை. இது திட்டமிட்ட தாமதப்படுத்துவதற்கு ஒரு சதி நடக்கிறது என்று நினைக்கிறேன். இதனால் மாணவர்களும், பெற்றோரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பது வேதனை யளிக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராகவே மத்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது. முன்னேறிய வகுப்பினருக்கு அவசர அவசரமாக 10 சதவீத இட ஒதுக்கீடு என்று அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. தமிழ்நாடு இதனை செயல்படுத்தினால் மருத்துவ படிப்பில் 25 சதவீத கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 சதவீதம் கூடுதல் என்ற ஒரு சலுகையை காட்டி சமூக நீதியின் தாயகமாக வாழக்கூடிய நம்முடைய நாக்கில் ‘தேனை தடவி’ ஏமாற்ற நினைக்கிறது மத்திய அரசு. 25 விழுக்காடு என்ற தூண்டிலை மத்திய அரசு நம் மீது வீசி அதில் நாம் சிக்கிக்கொள்கின்றோமோ என்று தோன்றுகிறது. அதில் ஒரு நோட்டம் பார்க்கிறது மத்திய அரசு. தமிழகத்தை பொறுத்த வரைக்கும் ஏற்கெனவே, பொது இடங்களுக்கு 31 சதவீத இடங்களை ஒதுக்க ஏற்பாடு நடந்து வருகிறது. மத்திய அரசு சுதந்திரமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சமூக நீதியை கொண்ட மாநிலம். அதை நீர்த்துப் போகச் செய்ய மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கொடிய விஷம் கொண்ட பாம்புக்கு நல்ல பாம்பு என்று பெயர் இருப்பது போல 25 சதவீத கூடுதல் இடஒதுக்கீடு என்று சொல்லி அந்த மயக்கத்திலும், கவர்ச்சியிலும் மாநில அரசு மனம் பறி கொடுத்து விடக்கூடாது. ஒரு ஆபத்தான கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். எனவே, மாநிலத்தின் சமூக நீதியை அழிக்க திட்டமிட்டுள்ளது. எனவே முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற கொள்கையில் தமிழக அரசின் நிலை என்ன? என்பதை உடனே விளக்க வேண்டும். சமூக நீதி காக்க 69 சதவீத இடதுக்கீடு என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இதுபற்றி ஆலோசிக்க மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி நல்ல முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.